புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்தும் கொழும்பு அமைப்பின் செயற்குழு கூட்டம் இன்று ஆரம்பம்

143 0

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்துதல், சர்வதேச தொழில் சந்தையில் வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல், புலம்பெயர் தொழிலாளர்களின் பணத்தை சரியான முறைகளில் நாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தும் கொழும்பு அமைப்பின் செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமாகவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (12) ஆரம்பமாகவுள்ள கொழும்பு செயல்பாடு (Colombo Process)    அமைப்பின் செயற்குழு கூட்டம் தொடர்பாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு International Organization for Migration டன் இணைந்து இலங்கை இதனை ஏற்பாடு செய்துள்ளது. இந்த செயற்குழு கூட்ட கலந்துரையாடல்  எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்புக்கு இலங்கை, பங்காள தேஷ், பாகிஷ்தான் ஆகிய நாடுகள் தலைமை தாங்குகின்றன.

புலம் பெயர் தொழிலாளர்களை அனுப்பும் நாடுகளுக்கான  வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான  பிராந்திய ஆலோசனை செயல்முறை, புலம்பெயர்ந்தோரின் குடும்பங்கள்  மற்றும் கௌரவமான புலம்பெயர் தொழிலாளர்  சமுதாயத்தின் நலனுக்கான பாதுகாப்பு, தொழிலாளர்களை முறையான மற்றும் கண்ணியமான முறையில் நிர்வகிப்பதற்குமான விடயங்களிலும் இதன் போது கவனம்செலுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் நாடுகள் கண்டுள்ள அனுபவங்கள் மற்றும் நலன் குறித்த திட்டங்களில்  கருத்துகள் பரிமாரிக்கொள்ளப்படவுள்ளன. இவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயணயக்கார தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ‘தெற்காசிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மறு ஒருங்கிணைப்பு பற்றிய பிராந்திய கையேடு’ம்  வெளியிடப்படவுள்ளது. நாடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கான வழிகாட்டுதலுக்கான விடயங்களை உள்ளடக்கியுள்ளன. இந்த கையேடு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன்  இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பால் (IOM)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Colombo Process  என்ற இந்த நிகழ்வு சர்வதேச தொழிலாளர் அமைப்பு ILO,புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சர்வதேச (IOM) அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவுடுவதற்கான அமைப்பு (UN Women)  ஆகியவற்றால் கூட்டாக முன்னெடுக்கப்படுவதுடன்  Swiss Agency for Cooperation (SDC)  இதற்கான நிதியுதவி வழங்குகின்றது.