ஷானி அபேசேகரவுக்கு முறையான பாதுகாப்பை வழங்கவும்

66 0

ஷானி அபேசேகரவை கொலை செய்ய சதித்திட்டம் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருக்கும் கருத்து பாரதூரமானது. அதனால் அவருக்கு முறையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (09) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி ஷானி அபேசேகரவை வாகனம் மூலம் மோதி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியது தொடர்பான தகவல் வந்திருப்பதாக  சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளால் சமீபத்தில் நீதிமன்றில் தெரிவித்திருக்கின்றனர். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

ஷானி அபேசேகரவுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் அந்த அச்சுறுத்தலுக்கு ஏற்றவாறு முறையான பாதுகாப்பை அவருக்கு வழங்குவது எமது பொறுப்பாகும்.

அது எமது கடமையுமாகும்.  மோதச் செய்து கொலை செய்தல், எரித்து கொலை செய்தல் போன்ற உதாரணங்கள் எமது நாட்டில் இருக்கின்றன.

அதனால் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றததுக்கு தெரிவித்த விடயங்களை அடிப்படையாக்கொண்டு ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு தொடர்பாக, கவனத்திற்கொண்டு முறையான பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர்  விமல் வீரவன்ச எம்பி. தெரிவிக்கையில், ஷானி அபேசேகர தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு தெரிவித்திருக்கும் விடயம் பாரதூரமானதாகும்.

பொலிஸ் அதிகாரி ஒருவரை அவ்வாறு மரணக்க முடியும் என்றால் எங்களையும் அவ்வாறு மரணிக்கச்செய்ய  திட்டமிட முடியும். அதனால்  சட்டமா அதிபரை பாராளுமன்றத்துக்கு அழைத்து அதன் உண்மைத் தன்மை தொடர்பாக கேட்டறிந்து இந்த சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.