இலங்கையில் சுமார் 37, 000 துப்பாக்கிகள் உரிமம் பெறப்பட்டு பாவனையில் உள்ளதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையிலான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அண்மையில் கூடியது.
இந்தக் குழு கூட்டத்தின்போது, 2020ரூபவ் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன மற்றும் அதிகாரிகள் குழுவினர் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது 1996ஆம் ஆண்டு 22ஆம் இலக்க துப்பாக்கி (திருத்தம்) சட்டத்திலும், 2012ஆம் ஆண்டு முதல் வெடிபொருட்கள் (திருத்தம்) சட்டத்திலும் திருத்தம் செய்ய குழு பரிந்துரை செய்திருந்த போதிலும், பல்வேறு காரணங்களால் அது தாமதமாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
அதேநேரம், நாட்டில் இதுவரை சுமார் 37, 000 துப்பாக்கிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததோடு புதிய திருத்தச் சட்டமூலத்துக்கான வரைவு இறுதிக்கட்டத்தில் உள்ளமையால் விரைவில் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில்ரூபவ் 1996ஆம் ஆண்டு 22ஆம் இலக்க துப்பாக்கி (திருத்தம்) சட்டத்திலும், 2012ஆம் ஆண்டு முதல் வெடிபொருட்கள் (திருத்தம்) சட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை உடன் பூர்த்தி செய்யுமாறும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு குறிப்பிட்டதோடு துப்பாக்கி உரிமக் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாது விட்டால் அரச வருமானத்துக்கு இழப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுத்து முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

