விசேட தேவையுடையவர்களின் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அவ்வாறான எண்ணம் இருக்குமானால் அதனை அரசாங்கம் நீக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் விசேட தேவையுடையவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
2012 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் தரவுகளின் பிரகாரம், இந்நாட்டில் விசேட தேவையுடையவர்கள் மொத்த சனத்தொகையில் 8.7 வீதமாகும். அதாவது 16 இலட்சம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பல வருடங்களாக விசேட தேவையுடையவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படாததால்,இந்த எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம் என்றபடியால்,மேற்குறிப்பிட்ட சனத் தொகை கணக்கெடுப்புக்கு பயன்படுத்தப்பட்ட முறைமையினால் அதிகளவான நபர்கள் இதில் உள்வாங்கப்படவில்லை
2003 இல் விசேட தேவையுடையவர்கள் தொடர்பான தேசிய கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் பிரகடனத்திற்கு உடன்பட்டுள்ளது, எனவே இது தொடர்பான சட்ட விதிகளை உருவாக்குவதற்கான சட்டப்பூர்வ கடமை இருந்தாலும்,இதற்கு அரசாங்கம் கூடிய பங்களிப்பை வழங்குவதை கண்டுகொள்ள முடியாதுள்ளது.
இத்தகைய விசேட தேவையுடையவர்கள் இருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிப்பதால், இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்ப அலகுகள் அதிகளவில் இருப்பதால், அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டு அரச பணிகளுக்கான ஆட்சேர்ப்பில் தகுதியின் அடிப்படையில் விசேட தேவையுடையவர்கள் சமூகத்தினருக்கு 3 வீத சலுகை வழங்கப்பட்டது. இன்று அது நடைமுறைப்படுத்தப்படவில்லை .
அதேநேரம் அரசாங்கத்தின் புதிய வற்வரி அதிகரிப்பின்போது இந்த விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் வற் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான எணணம் இருந்தால் அதனை நீக்கிக்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

