2,500 ரூபா விவகாரத்தினால் என் வீடு தீக்கிரையாக்கப்பட்டது

117 0

ஒருமாத செலவுக்கு 2,500 ரூபா போதும் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை.சொல்லாத விடயத்துக்காகவே என் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.ஊடகங்களினால் நான் அதிகளில் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளேன் என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  வெகுஜன ஊடகம் மற்றும் துறைமுகம்,கப்பற்றுறை, மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கடந்த ஆண்டு போராட்டத்தின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, ‘இவர் 2,500 ரூபாவால்  வாழ முடியும் என்று குறிப்பிட்டவர் ஆகவே இவரின் வீட்டுக்கு தீ வைக்க வேண்டும் ‘என்று குறிப்பிட்டுக் கொண்டு போராட்டகாரர்கள் எனது வீட்டுக்கு  தீ வைத்தார்கள்.

ஊடகங்களினால் தான் விமர்சிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டேன்.ஒரு மாத செலவுக்கு 2,500 ரூபா போதும் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை.

அவ்வாறு நான் குறிப்பிட்டதாக ஊடகங்கள் திரிபுப்படுத்தி குறிப்பிட்டு என் மீது வெறுப்பை தோற்றுவித்தன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் நான் கல்வி அமைச்சராக பதவி வகித்தேன்.அப்போது கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான மாத கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஆராய்ந்து நான் அமைச்சரவைக்கு யோசனை ஒன்றை முன்வைத்து கொடுப்பனவு அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன்.

இதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு முதல் ஜனவரி மாதம் முதல் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத கொடுப்பனவை 500 ரூபாவால் அதிகரித்து 3,000 ரூபா கொடுப்பனவை வழங்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் ஒருமாத செலவுக்கு 2,500 போதும் என்று நான் குறிப்பிட்டதாக வதந்தி பரப்பி விடப்பட்டது.

இதனால் என்மீது பாரிய வெறுப்புக்கள் மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றது.இவ்வாறான நிலை ஊடக நெறி கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமானது என்றார்.