காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு வேண்டும்: வீதிக்கு இறங்கிய இலுப்படிச்சேனை மக்கள்

165 0

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலுப்படிச்சேனைப் பகுதியிலேயே நேற்றையதினம் (07.12.2023)  குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றுள்ளது.

இலுப்படிச்சேனை – வேப்பவெட்டுவான் பிரதான வீதியை வழிமறித்து 50இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் பின் வேப்பவெட்டுவான் – இலுப்படிச்சேனை சந்தி வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், சந்தியிலும் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, இலுப்படிச்சேனை பிரதான வீதியால் பேரணியாக சென்றுகொண்டிருந்தவேளை அந்த வழியால் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் திடீரென வருகை தந்ததை அவதானித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அவரது வாகனத்தை வழிமறித்துள்ளனர்.

மேலும், தமக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருமாறும் காட்டு யானை தொல்லையில் இருந்து தம்மை விடுவிக்குமாறும் பணிப்பாளரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேறு வேலையாக அவசரமாக செல்வதாகவும் மீண்டும் வரும் போது உங்களை சந்திக்கிறோம் எனவும் தெரிவித்து வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் சென்றுள்ளார்.

இதன்பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் இலுப்படிச்சேனை – வனஇலாகா அலுவலகம் வரை பேரணியாக சென்றுள்ளனர்.

தொடர்ந்து, வனஇலாகா அலுவலகம் முன் இலுப்படிச்சேனை வன இலாகாவுக்கு சொந்தமான பகுதியான அரச காணியான தேக்கஞ்சோலை பகுதியினுள் காட்டு யானைகள் நிற்பதாகவும் அக்காட்டினுள் உள்ள யானையை அங்கிருந்து விரட்டும் படியும், தேக்கஞ்சோலை சோலை காட்டுப்பகுதியை துப்பரவு செய்யக்கோரியும் வனஇலாகா அலுவலகம் முன் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

“அதிகாரியே வெளியேறு வெளியேறு.. எமக்கான தீர்வை பெற்றுத் தா பெற்றுத் தா.. என கோஷமிட்டு என ஏறத்தாழ ஒரு மணி நேரம் வாயிற்கதவை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு மணி நேரம் கடந்தும் எந்த அதிகாரியும் வெளியே வரவில்லை எனவும் இதன் போது அங்கு வருகை தந்த கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரை வனஇலாகா அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாட பொலிஸார் உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்.

அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவது தொடர்பாக கூறிய பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.