முல்லைத்தீவில் வீணாக்கப்படும் கைத்தொழில் மூலப்பொருட்கள்

153 0

நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் இருந்தும் அவற்றை வீணடித்துச் செல்லல் பொருத்தமற்ற வாழ்கை முறையாகவே அமையும்.

முல்லைத்தீவில் உள்ள வளம் நிறைந்த கிராமங்களில் ஒன்றாக உடுப்புக்குளமும் அமைகின்றது.

தென்னை பயிர்செய்கையை முதன்மையாக கொண்ட கிராமம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐநூறு குடும்பங்களுக்கு மேல் கொண்ட நிலப்பரப்புக்களை அதிகம் கொண்ட இந்த கிராமம் குளத்தையும் தன் அகத்தே கொண்டமைந்துள்ளது.

இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் உள்ளூர் உற்பத்திகளினூடான நுகர்வுகள் ஊக்குவிக்கப்படும் போது நுகர்வுக்காக இறக்குமதியாகும் பொருட்களை குறைக்க முடியும்.

தென்னையை பிரதான பயிராக கொண்டு கட்டியமைக்கப்பட்ட இந்த கிராமத்தில் பெருந்தோட்டங்களாக தென்னந்தோப்புக்கள் உள்ளமை கவனிக்கத்தக்கது.

25 ஏக்கர், 50 ஏக்கர் என்ற கணக்கில் தென்னைகளையும் சுவாமி தோட்டம் என்ற பெரியளவிலான தெங்கு பயிர்ச்செய்கை பிரதேசத்தினையும் கொண்டிருப்பதால் அதிகளவான தேங்காய்களை உற்பத்தி செய்யும் கிராமமாக இது அமைகின்றது.

தோட்டங்களில் உற்பத்தியாகும் தேங்காய்களை உள்ளூர் கொள்வனவாளர்களுக்கே தோட்ட உரிமையாளர்கள் விற்பனை செய்கின்றனர்.

அவர்களிடம் இருந்தே தேங்காய்களை வெளி கொள்வனவாளர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.தேங்காய்கள் மட்டை அகற்றப்பட்டு வெளியூர் கொள்வனவாளர்களால் பெறப்படுகின்றது.

இதனால் அதிகளவான மட்டைக்கள் கிடைக்கின்றன. மட்டைகளில் இருந்து தும்பு, மட்டை சிறு துண்டு, தும்புச்சோறு, மட்டைக் கழிவு ஆகியவற்றை பெற்று முடிவுப் பொருட்களுக்கான மூலப்பொருட்களாக பயன்படுத்த முடியும்.

மட்டை தும்பினைக் கொண்டு தும்புத்தடி, கயிறு, துடைப்பம், போன்ற பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த பொருட்களை மக்கள் நுகர்வுப்பொருட்களாக பயன்படுத்தி அவை பழுதடையும் போது சூழலுக்கு கழிவுப் பொருட்களாக விடுவிக்கும் போது அவை இலகுவில் உக்கலடைந்து சூழல் மாசடைவதை தவிர்க்க உதவும் என்பதும் நோக்கத்தக்கது.

துப்பும் சோறு மற்றும் மட்டைத்துண்டு என்பன ஏற்றுமதிப் பொருட்களாக பயன்படுத்துவதோடு விவசாய செயற்பாடுகளிலும் அவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும் என உற்பத்தியாலை சார்பாக பேசிய ஒருவர் குறிப்பிட்டார்.

அதிகளவான மட்டைத் தும்புகளை உற்பத்தி செய்யும் போது அவற்றையும் வெளியூர் ஏற்றுமதிப் பொருளாக பயன்படுத்த முடியும் என தும்புத்தடி உற்பத்தியாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

தும்புத்தடி உற்பத்திக்கு தேவையான மட்டைத்தும்புகளைதான் யாழ்ப்பாணத்தில் இருந்து பெறுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

தேங்காய்ச் சிரட்டைகளையும் பெறலாம்

தேங்காய்ச் சிரட்டைகளை பெற்று அகப்பைகளையும் எரி பொருளுக்கான காபன்கரிகளையும்,கைவினைப் பொருட்களையும் உற்பத்தி செய்யலாம் என குறிப்பிடும் சுயமுற்சி தொழிலாளர் ஒருவர் கைவினைப் பொருட்களை சுற்றுலாப்பயணிகளை இலக்காக கொண்டு உற்பத்தி செய்தால் நல்ல சந்தைவாய்ப்புக்களை பெற முடியும் என மேலும் குறிப்பிட்டார்.

தென்னையின் இலையினை ஓலை, கீற்று என குறிப்பிடுவது வழமை. தென்னை ஓலைகளைக்கொண்டு கிடுகுகளை உற்பத்தி செய்து பிரதான வருமான மூலங்களில் ஒன்றாக பயன்படுத்திய உடுப்புக்குளம் இப்போதெல்லாம் அந்த துறையில் கவனம் செலுத்துவதில்லை என அந்த பகுதியின் கிடுகுவியாபாரி குறிப்பிடுகின்றார்.

 

இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக கிடுகு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் இவர் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்திற்கு முன்னர் கிடுகுக்கான கேள்வி அதிகமாக இருந்தது.

அதனால் உடுப்புக்குளத்தில் அதிகமான பெண்கள் கிடுகு இழைத்தலில் ஆர்வம் காட்டியிருந்தனர்.

உடுப்புக்குளத்தில் உற்பத்தியாகும் தென்னம் ஓலைகளையும் அதனைச் சூழவுள்ள கிராமங்களில் இருந்தும் ஓலைகளை பெற்று கிடுகுகளை இழைத்து விற்பனையில் ஈடுபட்டு தங்கள் குடும்ப பொருளாதாரத்தை சீர்செய்து கொண்டனர்.

கிடுகுகளை உடுப்புக்குளத்தில் தன்னோடு கமல் என்ற மற்றொரு வியாபாரியுமாக இருவர் கொள்வனவு செய்து வெளியூர்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் தற்போது கிடுகு உற்பத்தி குறைந்துள்ள போதும் அதற்கான கேள்வி தொடர்ந்தும் இருக்கின்றது.

தென்னந் தோட்டங்களில் ஓலைகளை பயன்படுத்தாது கழவுகளாக கிடங்குகளில் போட்டு உக்கலடைய விடுகின்றனர்.

தென்னம் ஈர்க்குகள் தேவையாகின்றன

கிடுகு இழைத்த ஓலையில் கழிக்கப்படும் மீதியிலிருந்தும் கிடுகு இழைக்க முடியாத பழுதடைந்த ஓலைகளிலிருந்தும் ஈர்க்குகளை பெற்று சுத்தம் செய்து விளக்குமாரினை உற்பத்தி செய்ய முடியும் என விளக்குமார் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் ஒருவர் குறிப்பிடுகின்றார். (தென்னம் ஈர்கை கொண்டு உற்பத்தி செய்யப்படும் குப்பைகளை கூட்டி குவிக்கப் பயன்படும் ஒரு கருவி)

ஈர்க்குகளை சுத்தம் செய்து தரும் போது அதனை ஒரு கிலோ ரூபா 100/= கொள்வனவு செய்யலாம் என குறிப்பிடும் அவர் இப்போது ஈர்க்கு உற்பத்தியும் விற்பனையும் இல்லாது போய்விட்டதாகவும், இதன் காரணமாக விளக்குமார் உற்பத்திக்கான ஈர்க்குகளை தாமே உற்பத்தி செய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகமான தென்னோலைகளை கழிவுகளாக உக்கலடைய விடுவதை தென்னம் தோட்டங்களில் பார்க்க முடிவதாகவும் அந்த செயற்பாடுகளை எண்ணும் போது கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உடுப்புக்குளம் பாடசாலைக்கு அண்மையில் “பொன்றோ” என்ற பொச்சு சிறுதுண்டு உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வந்திருந்த போதும் இப்போது அது மூடப்பட்டுள்ளது.

மூடப்பட்டமைக்கு பல காரணங்கள் முன் வைக்கப்பட்டுள்ள போதும் அதற்கான மூலப்பொருளாக அமைந்த மட்டை வீணாகிப் போகின்றது என்பது உண்மையே.

 

மட்டைகளை ஈரப்படுத்தி அதன் வெளியுறை நீக்கப்பட்டு வெவ்வேறு அளவுகளில் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு உலர்த்தப்பட்டு பொதி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன.

நான்கு தொழிலாளர்களை கொண்டு இயங்கிய குறித்த மட்டைத்துண்டு தொழிற்சாலை இயங்காமைக்கான காரணங்களாக,

01) பொருளாதார விலையேற்றத்திற்கேற்ப சம்பளத்தினை வழங்க முடியாத சூழல்

02) தொழில்நுட்ப அறிவு போதாமை

03) பயிற்றப்பட்ட ஊழியர்கள் பற்றாக்குறை

04) சுகாதார சிக்கல்களுக்கு தீர்வு காண்பதிலுள்ள சவால்கள்

05) பொருத்தமான சந்தை வாய்ப்பை பெறுவதில் உள்ள இடர்பாடுகள் என பல காரணங்கள் தொழிற்சாலை உரிமையாளராலும் ஊரினைச் சேர்ந்த சிலராலும் முன்வைக்கப்பட்ட போதும் ஆர்வமின்மையே பிரதான காரணமாக இனம் காண முடிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொழிற்சாலையினை குத்தகையடிப்படையில் மற்றொருவருக்கு கொடுக்க உரிமையாளர் முன்வந்தாலும் அதனை எடுத்து முன்கொண்டு செல்ல ஆர்வத்தோடு முன்வரக்கூடிய ஒருவர் இல்லை என கிராம அபிவிருத்தி தொடர்பான அரச உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

சந்தை வாய்ப்புக்களை தேடி பெறுவதிலும் முடிவுப் பொருட்களை பயன்படுத்தக்கூடிய ஏனைய தொழில்முறைகளை ஆக்குவதிலும் பொருத்தமான முறையில் சிந்திக்கப்படவில்லை என்பதனையும் அவதானிக்க முடிகின்றது.

தும்புக்கட்டை மற்றும் வாசல் மிதி உற்பத்தியில் ஈடுபட்டுவரும் சூரி ஐயா என்பவருக்கு தொழில் மூலப்பொருளாக கயிறும் தென்னம் பொச்சுத் துப்பும் இருக்கின்றது.

தும்புக்கட்டை உற்பத்திக்கு சிறிய குறுக்குப் பருமனுடைய கயிறுகள் தேவைப்படுவதாகவும் வாசல் மிதி உற்பத்திக்கு சற்று குறுக்குப் பருமன் கூடிய கயிறுகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டமை நோக்கத்தக்கது.

கயிறு உற்பத்திக்கான தும்பினை உற்பத்தி செய்வதில் உள்ள இடர்பாடு காரணமாக கயிறு உற்பத்தியை செய்ய முடியவில்லை எனவும் கயிறினை திரிப்பதற்கான இயந்திரங்களை பெற்றுக் கொள்வதில் நிதிச் சிக்கல் இருப்பதாகவும் உற்பத்தியாளர் ஒருவர்  குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இவரால் பெருமளவு கயிறு உற்பத்தி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாசல் மிதி மற்றும் தும்புக்கட்டை உற்பத்திக்கு கயிறு இன்றியமையாதது என்பதோடு தும்பு உற்பத்திக்கு பொச்சுமட்டைகள் தான் பயன்படுகின்றது என்பதும் நோக்கத்தக்கது.

தென்னையின் மூலம் கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு முடிவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் போது வீணாகும் மூலப்பொருட்களை பயனுடைய முறையில் மாற்றியமைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக தெங்கு தொழிற்பேட்டை என்ற ஒன்றை உடுப்புக்குளத்தில் உருவாக்குதல் வேண்டும் என்ற கருத்தாக்கத்தினை முன்வைத்தார் அவ்வூர் எழுத்தாளர் ஒருவர்.

மட்டைகளை கொண்டு தும்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் போது போதியளவு தும்பு உற்பத்தி செய்யப்படும். அந்த தும்பினை மூலப்பொருளாக கொண்டு கயிறு திரித்தலை ஊக்கப்படுத்தி அதனை ஒரு தொழிற்சாலையாக முன்னெடுக்க வேண்டும்.

 

தும்புத் தடிகளையும் உற்பத்தி செய்ய வேண்டும். கயிறு உற்பத்தி, தும்புத்தடி உற்பத்தியை இரு வேறு பிரிவுகளாக முன்னெடுக்கும் போது அவற்றுக்கான தனித்துவப் போட்டியை உருவாக்க முடியும்.

வாசல் மீதியை உற்பத்தி செய்வதனையும் ஊக்கப்படுத்த வேண்டும். இப்போது ஒரு வாசல் மீதியை 500ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடிகின்றது.

மூலப்பொருட்களை உள்ளூரிலேயே பெற முடிந்தால் இதனை இன்னும் குறைவான விலையில் சந்தைப்படுத்த முடியும் என உற்பத்தியாளர் குறிப்பிட்டுள்ளமையும் நோக்கலாம்.

ஒரு வாசல் மீதியின் பாவனைக்காலம் அதிகம் என்பதோடு பயன்பாட்டுக்கும் அது இலகுவானதாகும்.ஈர்க்கு உற்பத்தியை ஊக்கப்படுத்தி விளக்குமார் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். தெங்கு மூலப்பொருட்கள் வீணாவது தடுக்கப்படுவதோடு பலருக்கு வேலைவாய்ப்புக்களும் கிடைக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தருடனும் கிராமசேவகருடனும் இதுபற்றி பேசிய பொழுது தங்களால் முடிந்தளவுக்கு உதவியாக இருக்க முடியும் என்ற போதும் மக்களிடையே ஆர்வமும் முயற்சியும் இல்லை என குறிப்பிட்டனர்.

சிலர் சிறுகைத்தொழில் முயற்சிகளை தொடங்கிய போதும் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லாமையால் தங்களால் மேற்கொண்டு ஊக்குவிப்புக்களையும் வழிகாட்டல்களையும் மேற்கெள்ள முடிவதில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

இளைஞர் யுவதிகளை ஒன்று திரட்டி வைத்துள்ள கிராம விளையாட்டுக்கழகம் விளையாட்டை ஊக்குவிக்குமளவுக்கு தனிநபர் வருமானம் உயர்வடைவதற்கேற்ற முறையில் தொழில்துறைகளைப்பற்றி சிந்திப்பதாக இல்லை எனவும் ஊரில் உள்ள வயதான சமூக சேவையாளர்கள் பலர் குற்றம் சாட்டுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தேங்காய் மட்டைகளை கொண்டு சரியான உற்பத்தி முகாமைகள் உடுப்புக்குளத்தில் இல்லாமையால் உரிக்கப்படும் மட்டைகளை தென்னம் தோப்புக்களிலும் ஏனைய வெட்டையான நிலங்களிலும் கொட்டப்பட்டு உக்கவிடப்படுகின்றது.

 

அதிகளவான தேங்காய்களை உரித்து ஏற்றுவதனாலும் ஒவ்வொரு தேங்காய் பறியலின் போதும் அதிக தேங்காய்கள் வருவதனாலும் இடப்பற்றாக்குறை வருகின்றதாகவும் தேங்கும் மட்டைகளை அகற்ற வேண்டியதாகின்றதாலும் இந்த சூழல் தோன்றுவதாக உள்ளூர் தேங்காய் கொள்வனவாளர்கள் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் உள்ளூர் உற்பத்திகளினூடான நுகர்வுகள் ஊக்குவிக்கப்படும் போது நுகர்வுக்கான இறக்குமதியாகும் பொருட்களை குறைக்க முடியும்.

பொதுமக்களின் குடும்ப பொருளாதாரத்தை உயர்ந்த மட்டத்தில் பேண முடியும் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.