காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழையால் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

136 0

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி சேதமடைந்தன. இந்நிலையில், ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம்நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்திஉள்ளனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி, உபரிநீர்வெளியேறி வருகிறது. மேலும், பாசனக் கால்வாய்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும் விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது.

பல்வேறு இடங்களில் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கின. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடூர் கிராமத்தில் 300 ஏக்கர், வேலியூரில் 650, புதுப்பாக்கத்தில் 250, ஈஞ்சம்பாக்கத்தில் 190, கம்மார்பாளையத்தில் 290, கீழ்கதிர்பூரில் 400 மற்றும் உத்திரமேரூர் வட்டத்தில் 350, குன்னத்தூரில் 600 ஏக்கர்பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அதிகம் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நெற்பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கனமழையால் பல்வேறு கிராமங்களில் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைந்துள்ளன. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் அதிக அளவில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

மேலும், காய்கறிச் செடிகளும் மழையால் சேதமடைந்துள்ளன. எனவே, வேளாண் துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தி, நெற்பயிர் சேதத்துக்கு ஏக்கருக்குரூ.40 ஆயிரம் மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல, உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.