கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை பதவி விலக்க தைரியமில்லை

121 0

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை பதவி விலக்க தைரியமின்றி பாராளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதோடு மாத்திரமின்றி, அதனைக் கலைப்பதற்கும் திட்டமிடப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

அரசாங்கத்திலுள்ளவர்களின் ஆதரவுடன் இடம்பெறும் ஊழல், மோசடிகளை மறைப்பதற்காக இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சுமத்திய அவர், இவற்றுக்கு எதிராக ஜனவரியில் மக்களை வீதிக்கிறக்கி ஜனாதிபதி மாளிகைக்கு செல்வோம் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கோப் குழுவின் செயற்பாடுகளை ஒத்தி வைத்துள்ளதன் மூலம், அரச நிறுவனங்கள் பலவற்றில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் தொடர்பான வெளிப்படுத்தல்கள் திட்டமிட்டு காலம் தாழ்த்தப்பட்டுள்ளன.

வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பின் பின்னர் பாராளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் தற்போதுள்ள கோப், கோபா உள்ளிட்ட அனைத்து குழுக்களும் செயலிழக்கும்.

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை நீக்குவதற்கு தைரியமில்லாததால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவரை நீக்குவதற்காக பாராளுமன்ற அமர்வுகளை நிறைவு செய்ய வேண்டுமா? அரசாங்கத்திலுள்ளவர்களின் அனுசரணையுடன் இடம்பெறும் ஊழல், மோசடிகளை மறைப்பதற்கே இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதோடு, அதனை கலைப்பதற்கும் திட்டமிடப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும், சபாநாயகருக்கும் கோப் குழுவை ஒத்தி வைக்க முடியும்.

ஆனால் அரச நிறுவனங்களில் நடக்கும் ஊழல், மோசடிகளை மூடி மறைக்க முடியாது. அடுத்து ஆட்சியைக் கைப்பற்றும் பிரேமதாச அரசாங்கத்தில், மக்களின் சகல கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

அதற்கமைய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நாட்டை வங்குரோத்துக்குள்ளாக்கியவர்கள் நிச்சயம் சிறையிலடைக்கப்படுவர்.

ஜனவரியிலிருந்து எரிபொருளுக்கான வட் வரியை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதனால் ஜனவரியில் இருமுறை பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். ஐக்கிய மக்கள் சக்தியாக நாம் இந்த தீர்மானங்களை எதிர்க்கின்றோம்.

வரிகளை அதிகரிப்பதற்கு பதிலாக ஏற்றுமதி வருமானத்தையும், முதலீட்டு வாய்ப்புக்களையும் அதிகரிக்க வேண்டும். ஜனவரியிலிருந்து மீண்டும் மக்களை வீதிக்கு இறக்கி, ஜனாதிபதி மாளிகைக்குச் செல்வோம். பொலிஸார் தடையுத்தரவைப் பெற்றாலும், அவற்றை மீறி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.