பொத்துவில்க்கான தனியான கல்வி வலயம் அமைக்கப்படுவதாக ஆரம்பத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றபோதும் அது இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. அதனால் அவசரமாக அதனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கல்வி அமைசுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொத்துவில்க்கான கல்வி வலயம் அக்கரைப்பற்றில் இருந்து சுமார் 40 கிலாே மீட்டர் தூரத்தில் இருப்பதால் பொத்துவில்க்கு தனியான கல்வி வலய தேவைப்பாடு இருக்கிறது. அதனால் அவசரமாக அதனை செய்துதர வேண்டும். பந்துல குணவர்த்தன காலத்திலும் அவர் அங்குவந்து பார்த்து செய்து தரவதாக தெரிவித்தபோதும் அதனை செய்துதரவில்லை.
அதேநேரம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான முக்கியமான சில பீடங்கள் அவசியமாக இருக்கின்றன. அட்டாளைச்சேனையில் இருக்கின்ற ஆசிரியர் கல்வி கலாசாலையில் பல கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன. அந்த கட்டிடங்களை பயன்படுத்தி அங்கு கல்வி பீடத்தை அமைக்கலாம் என்றும் அதேபோன்று மல்வத்தை பிரதேசத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு இருக்கின்ற காணியை பாவித்து அங்கு விவசாய பீடத்தை அமைக்கலாம். ஏனெனில் நெல் உற்பத்தியில் ஆகக்கூடுதலாக வருமானங்களை ஈட்டித்தரக்கூடியதாக இருக்கிறது.
மேலும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் விருப்பமாக இருப்பது, அங்கு உல்லாச பயணத்துறைக்கான ஒரு பீடம் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். பொதுத்துவில் அருகம்பை, பாசிக்குடா பிரதேசங்களுக்கும் அங்கிருக்கின்ற ஹோட்டல்களுக்கும் தேவையான ஊழியர்களை பயிற்றுவிப்பதற்குமான ஒரு பல்கலைக்கழக கற்கை நெறிகளைக்கொண்ட ஒரு பல்கலைக்கழகமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு பீடம் அமைக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளிக்கையில், கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஆரம்பமாக இடம்பெறப்போவது கல்வி வலயங்கள், கொத்தனி காரியாலயங்கள் ஏற்படுத்தப்படும். இதன்போது 120ஆக இருக்கும் கல்வி வலயங்கள் 122ஆக அதிகரிக்கப்படும். இதன்போது பொத்துவிலுக்கு தனியான கல்வி வயம் ஒன்று ஏற்படுத்தப்படும். ஏனெனில் அங்கு இருக்கும் கல்வி வலயம் அதிக தூரமாகும்.
அத்துடன், கல்வி மறுசீரமைப்பின் கீழ் 19 கல்வியல் கல்லூரிகளையும் இணைத்து ஒரு கல்வியல் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும். அதன் மூலம் நேரடியாகவே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விவசாய பீடம் ஏற்படுத்த முடியுமாகும் என்றார்.

