சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கவலையடைகிறேன்

151 0

கல்முனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த  சம்பவம் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் கவலையடைகிறேன் என மகளில், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற  அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் மகளில், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைசுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கல்முனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி கிடைத்ததில் இருந்து, அந்த சம்பவம் தொடர்பாகவும் சிறுவன் தொடர்பாகவும் உனடியாக தேடிப்பார்த்தேன். மரணித்த சிறுவன் பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளை. கோயில் ஒன்றில் தான் இருந்து வந்துள்ளான். அதேநேரம் சிறுவனை தாக்கியதாக தெரிவிக்கப்படும் பராமரிப்பு நிலைய பரிபாலகரான பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது உள்ளக விசாரணை ஒன்று இடம்பெற்று வருகிறது.

அத்துடன் சிறுவர்களின் கல்வி, சுகாதாரம். பாதுகாப்பு தொடர்பாக கண்காணித்து வரும் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பது தொடர்பில் நான் மிகவும் கவலையடைக்கிறேன். அதேநேரம் பராமரிப்பு நிலையத்தின் பராமரிப்பு பெண், இந்த நிலையத்துக்கு எவ்வாறு உள்வாங்கப்பட்டார்.

அரசியல் தலையீட்டின் மூலம் வந்தவரா என தேடிப்பார்த்தேன். ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை. பரீட்சையில் சித்தியடைந்தே பராமரிப்பு நிலையத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். ஆனால் பராமரிப்பு நிலையத்தில் சேவை செய்ய தேவையான பயி்ற்சி அவருக்கு இல்லை. பராமரிப்பு நிலையத்தில் பணி செய்கிறவர்கள் சாதாரணமாக வீடுகளில் வேலை செய்கிற ஊழியர்கள் அல்ல. அவர்களுக்கு இங்குள்ள சிறுவர்களின் மன நிலையை புரிந்துகொள்ள முடியுமாகி இருக்க வேண்டும்.

அதனால் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சேவை செய்கின்றவர்களுக்கு எமது அமைச்சினால் பயிற்சிகளர வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.