பிள்ளைகளின் நிர்வாண படங்களை விற்று உழைக்கும் நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டுள்ளது

139 0

தமது பிள்ளைகளின்  நிர்வாண படத்தை வைத்து உழைக்கும் நிலைக்கு சமூக நிலை பலவீனமடைந்துள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டும்.

இந்த அரசாங்கத்துடன் பேசி பயனில்லை. பாராளுமன்றத்தில் இடம்பெறும் விவாதங்களினால்  மக்களுக்கு பயனேதுமில்லை,ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை   இடம்பெற்ற  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  விளையாட்டுத்துறை, இளைஞர்  விவகாரங்கள் அமைச்சு  மற்றும் மகளிர்,சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான  செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு,மகளிர்  விவகார அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு மட்டுப்படுத்தல் உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பினர்   நேற்று கொழும்பில் மேற்கொண்ட போராட்டத்தில் பொலிஸார் வன்மையான முறையில் தாக்குதலை மேற்கொண்டார்கள்.

பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளவர் மூன்று மாத காலத்துக்குள் தனது செயற்பாடுகளை காண்பித்து ஆட்சியாளர்களை மகிழ்விக்க முயற்சிக்கிறார்.உயர்மட்டத்தில் இருந்து  வந்த கட்டளைகளுக்கு  அமையவே பொலிஸார் ஜனநாயக போராட்டத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள்.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் போது அதிகாரத்தை கொண்டு மக்களின் குரல்கள் முடக்கப்படுகின்றன.ஆனால் ஒன்றிணைந்து செயற்பட ஜனாதிபதி அழைப்பு விடுக்கிறார்.மக்களுக்கு எதிராக செயற்படும் இந்த அரசாங்கத்துடன் எவ்வாறு ஒன்றிணைவது.இனி பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை.சிறந்த தலைமைத்துவத்துக்காக பெண்களை ஒன்றிணைப்பேன்.

குருநாகல் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் பதிவாகியுள்ளன.ஒரு தந்தை தனது 15 மகளின் நிர்வாண படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து 01 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.

அதற்கு தனது மனைவிக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளார். இறுதில் மனைவி அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இறுதியில் அந்த 15 வயது சிறுமிக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை. இந்த சம்பவத்துக்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டும்.ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தினால் சமூகம் இன்று  இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் பேசுவது பயனற்றதாகவே உள்ளது. முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு இங்கு யாரும் இல்லை. முன்பள்ளி பாடசாலையின் ஆசிரியர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினை பற்றி பேசுமாறு பலர் கோரிக்கை விடுக்கிறார்கள். பேசுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம், ஆனால் பேசுவதால் எவ்வித பயனுமில்லை.

வெளியில் நடப்பது ஒன்று பாராளுமன்றத்தில் நடப்பது பிறிதொன்று,அரசாங்கம் செயற்படுத்துவது பிறிதொன்று. ஆகவே இந்த ஆட்சியாளர்களினால் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.