பகுப்பாய்வு செய்யப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளில் பெரும்பாலானவை போதைப்பொருள்களே அல்ல

188 0

நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் மாத்திரம் 10,491 போதைப்பொருள் மாதிரிகள் நீதிமன்றங்களின் அனுமதியுடன் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகளில் 1471 மாதிரிகள் போதைப்பொருள் அல்ல என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, பகுப்பாய்வு செய்யப்படும் போதைப்பொருள் மாதிரிகள் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

ஒருசில பொலிஸாரின் செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த பொலிஸ் சேவை மீதும் மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள்.

நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் மாத்திரம் 10,491 போதைப்பொருள் மாதிரிகள் நீதிமன்றங்களின் அனுமதியுடன் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரிகளில் 1471 மாதிரிகள் போதைப்பொருள் அல்ல என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை முற்றிலும் பாரதூரமானது.

வெல்லம்பிட்டி, கடுவலை, மருதானை, பேலியகொட, முகத்துவாரம் ஆகிய பொலிஸ் நிலையங்கள் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் மாதிரிகள் போதைப்பொருட்கள் அல்ல என்று பகுப்பாய்வின்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே போதைப்பொருள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன.

இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.