படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும், ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வவுனியாவில் இன்று (02) கவனயீர்ப்பு போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற தரப்புக்கள் தமிழ் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக, 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வரும் வரையில் அதிகாரத்தரப்பின் வன்முறைகளால் 39 ஊடகவியலாளர்களின் இன்னுயிர்களை நாம் இழந்துள்ளோம். அதற்கான நீதி மறுக்கப்பட்ட நிலையில் இன்றும் நீதி கோரி போராடி வருகின்ற தரப்பாக நாம் இருக்கின்றோம்.
இதேவேளை மாற்றுக்கருத்துக்களை ஒடுக்கும் இந்த அரசாங்கம், ஊடகங்களை ஒடுக்கி, மக்களின் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.
அத்துடன், வவுனியாவில் கடமையாற்றிவரும் பிராந்திய ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
எனவே, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஊடகவியலாளர்கள் ஆகிய நாம் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம் என்பதை அதிகாரத்தரப்புக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.
இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “ஊடக சுதந்திரத்தை உறுதிசெய்”, “பொய்வழக்கு போடாதே”, “ஊடகப் படுகொலைகளுக்கு நீதி வேண்டும்”, “கருத்துச் சுதந்திரமே மக்களின் சுதந்திரம்” என்றவாறு கோஷம் எழுப்பினர்.

இப்பேரணி வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி வவுனியா தலைமை பொலிஸ் நிலையம் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை அடைந்ததோடு போராட்டம் முற்றுப்பெற்றது.

ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிச கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் வவுனியா வர்த்தக சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கங்கள், போராளிகள் நலன்புரிச் சங்கம், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு ஆகிய அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும், மதகுருமார்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.








 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            