இலங்கையில் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கின்ற நிலையில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்காக தலையிடக்கோரி சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு ஐநாவிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனுக்களை கையளிக்கவுள்ளது.
சிசிபிஆர் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சானகபெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
சமீபகாலங்களில் பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சானகபெரேரா சில நீதிமன்றங்கள் இவ்வாறான சில மரணங்களை குற்றங்கள் என குறிப்பிட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களிற்கு நீதி வழங்குவதற்கும் இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கான அவை மீண்டும் மீண்டும் நிகழ்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பொலிஸ்நிலையங்களில் இடம்பெற்ற மூன்றுமரணங்களை குற்றச்செயல்கள் என நீதிமன்றங்கள் குறிப்பிட்டுள்ள என தெரிவித்துள்ள சேனக பெரேரா அவ்வாறான மேலும் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்களிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனினும்இது மாத்திரம் போதுமானதில்லை பொலிஸ்நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மரணமடையும் போக்கிற்கு முடிவு காணவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு அரசாங்கம் நீதி வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள சிசிபிஆர் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சானகபெரேரா எதிர்காலத்தில் இவ்வாறான சட்டங்கள் நிகழ்வதை தடுப்பதற்கு அரசாங்கம் திட்டங்களை உருவாக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பும் பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை உயிரிழந்தவர்களின் உறவுகளும் இணைந்து ஐநா ஐரோப்பிய ஒன்றியம் சுவிஸ் தூதரகம் ஆகியவற்றிடம் பொலிஸாரின் பிடியில் மரணங்களை தடுத்து நிறுத்தக்கோரி முதலாம் திகதி மனுவை கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் மிக நீண்டகாலமாக இந்த விடயம் குறித்து குரல் எழுப்பிவருகின்றோம் ஆனால் உரிய அதிகாரிகள் தலையிடவில்லை இதனால் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

