மன்னார் நகர பகுதியில் திண்மக்கழிவு, மலக்கழிவு அகற்றும் பணிகள் நிறுத்தம் – மக்கள் பாதிப்பு

135 0

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி,பாப்பாமோட்டை பகுதியில் மலக்கழிவு மற்றும்   திண்ம கழிவுகளை கொட்டி  சேகரிக்க கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம்  கடந்த 23 ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் மன்னார் நகர சபையினால் மன்னார் நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்ட   திண்மக்கழிவு சேகரிப்பு மற்றும் மலக்கழிவு அகற்றும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது.

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாப்பாமோட்டை பகுதியில் மலக்கழிவு மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் அமைந்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன்,சுமார் 60 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக அமைக்கப்பட்ட குறித்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு முதல்  மன்னார் நகர சபை பிரிவில் சேகரிக்கப்படுகின்ற   திண்மக்கழிவுகள் மற்றும் மலக்கழிவுகள் அகற்றப்பட்டு  குறித்த நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக சேகரிக்கப்படுகிறது.

குறித்த செயல்பாடுகள் கடந்த 10 வருடங்களாக இடம்பெற்று வருகின்றது.

மன்னார் நகர சபை பிரிவில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவு மற்றும் மலக் கழிவுகளும்,ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மலக் கழிவுகளும் இங்கு சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று மன்னார் நகர சபைக்குச் சொந்தமான மலக்கழிவு மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

குறிப்பாக குறித்த பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், பறவைகள் சரணாலயத்திற்கு உரிய இடம் என கோரி கடந்த 8 ஆம் திகதி கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு மேன்முறையீட்டு நீதி மன்றத்தினால் கடந்த 23 ஆம் திகதி மன்னார் நகர சபைக்குச் சொந்தமான மலக்கழிவு மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் எவ்வித கழிவுகளும் கொட்டக்கூடாது என்ற தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக நேற்று புதன்கிழமை (29)  முதல் மன்னார் நகர சபை பிரிவில் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மலக்கழிவு மற்றும்   திண்மக்கழிவு அகழ்வு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

திண்மக்கழிவு மற்றும் மலக்கழிவு அகழ்வு நிறுத்தப்பட்டமையினால் மன்னார் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள மலசல கூட மலக்கழிவுகள் நாள் ஒன்றுக்கு 7 தடவைகள் அகற்றப்பட்டு வருகிறது.

தற்போது மல சல கூட மலக்கழிவுகள் வைத்தியசாலையில் அகழ்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளமையினால்  வைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகளில் உள்ளவர்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தின் பல பாகங்களில் திண்மக்கழிவுகள் அகழ்வு செய்யப்படாமையினால் பல பாகங்களிலும் திண்மக்கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

இதனால் மக்களும் அரச திணைக்களங்கள் மற்றும் வைத்தியசாலை தரப்பினரும்  பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மீளப்பெற்றுக்கொள்ள மன்னார் நகர சபை எதிர்வரும் திங்கட்கிழமை(4) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.

குறித்த காணி அரச காணியாக காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் நகரசபைக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் 2012 ஆம் ஆண்டு குறித்த காணியில் திண்மக்கழிவு மற்றும் மலக்கழிவு  முகாமைத்துவ நிலையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த காணி பறவைகள் சரணாலயத்திற்கு சொந்தமானதாக அடையாளம் காணப்பட்டு 2016 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.