பொலிஸாரின் கெடுபிடி- நினைவேந்தலுக்கு தயாராகிவரும் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்

198 0

பொலிஸாரின் கொடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் மக்களுக்கான உரிமைப்போரின்போது தங்களது இன்னுயிர்களை ஈக்கம் செய்த மாவீரர்களை வணங்கும் முகமாக நாளை 27ஆம் திகதி திங்கட்கிழமை மாவீரர் தின நினைவேந்தல் தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அனைத்து துயிலும் இல்லங்கள் மற்றும் வழமையாக மாவீரர் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தலுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தடையை நீதிமன்றத்தினூடாக பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸார் துயிலும் இல்லங்களிலே மாவீரர் துயிலும் இல்லம் என எழுதப்பட்ட வாயில்களை அகற்றுமாறு நிர்ப்பந்தித்து வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திலும் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும்  பூர்த்தியாகி வருவதாகவும் மக்களை அச்சமின்றி வருகை தந்து மாவீரர் தின நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறும் பணிக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.