சுதந்திரப் பேரொளியே வாழ்க! வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!

371 0

சுதந்திரப் பேரொளியே வாழ்க!

கார்த்திகை இருபத்தாறு …
எங்கள் விடியலின் ஏந்தல்
பிறந்த தினம் …
அடிமைச் சுழியின் ஆழத்தில் மூழ்கிய
தமிழீழ இறைமையின்
சுதந்திர ஒளியை ஏற்றப் பிறந்த
பேரொளியின் எழுச்சியின் தினம் …
பார்வதித் தாயெனும் பெருமாட்டி
தர்மத்தின் தவத்தில் மூழ்கி
“பிரபாகரன்”எனும் வீரசக்தியை
தமிழருக்காய் தந்த தினம் …

வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!
வாழ்க நீடுழி !தமிழீழத் தலைமகனே!

பேரொளியே விறல் வீச்சே!
நீ பிறந்த போது
முதல் முதல் காற்றோடு மோதி
எழுப்பிய சத்தம் …அழுகை அல்ல
அது …இந்த பிரபஞ்ச சக்தியோடு
நீ போரிட்ட முதல் உறுமல் …

செந்தேனே!
உன் தாயின் பாச அணைப்பில் மூழ்கி
நீ சிரித்தது எதற்காக?…
அம்மா வந்துவிட்டேன் …
இந்த கொடியோரை வதம் செய்ய …
என்பதற்காய்!

உன் பிறப்பின் இரகசியம் அறிந்தவள்
தமிழ்த் தாய் அல்லவா!
பார்வதித் தாயின் அக்கினிக் கருவறையில்
உன்னைக் காத்தவள் அவள்தானே!

நீ வீரமெனும் மகாசக்தியை
தமிழரில் ஏற்றப் பிறந்த
அணுஉலையின் வீச்சல்லவா!

வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!
வாழ்க நீடுழி!தமிழீழத் தலைமகனே!

வளர்ந்தாய்! நிமிர்ந்தாய்! எழுந்தாய்!
உன் இளமையின் உறுமல் ஒலியுடன் …
அது …
தமிழரின் அடிமை விலங்கில்
ஓங்கி அடித்தது விலங்கு சிதறிட …
வீரப்படையல் பதித்தது தமிழீழத்தில் …

நீ … எத்தனை புரட்சி விதைகளை
ஊன்றினாய் தமிழீழத்தில் …
உன் விழி சென்ற பார்வையாவும்
வீரவீச்சாய் நிமிர்ந்தது …

வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!
வாழ்க நீடுழி!தமிழீழத் தலைமகனே!

தமிழீழப் போரின் …
மூலவேராய் நிற்பது உன் மகாசக்தி …
எத்தனை புயல்கள் … எத்தனை ஊழித்தீக்கள் …
உறுதிதளரா திறன் …கருஞ்சுழியின் தவம் …
பேறு பெற்றவர்கள் உலகத் தமிழர்கள்
உன்னைப்போன்றோரு மகாசக்தியைப் பெற …

ஓர் அரசின் முழுக் கட்டமைப்பை
உருவாக்கிய திறன்!
மழுங்கிய தமிழரின் வீரமரபை
நாணேற்றிய உரம்!
தமிழரின் பண்பாட்டை
வழுவாமல் காத்த தவம்!
தமிழரின் தொன்மையை
உலகிலே பதித்த அறம்!

வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!
வாழ்க நீடுழி!தமிழீழத் தலைமகனே!

மௌனம் இருள் போன்ற தன்மை உடையது …
இருள் …அதன் ஆழத்தை வெளிப்படுத்தாதது
கருமைக்குள் இருப்பதை யாரறிவார்?
தலைவரின் மௌனிப்பின் ஆழத்தை யாரறிவார்?

உலகத்தின் புருவங்கள் வியந்தவண்ணம் நிமிர்கின்றது …
“பிரபாகரன்” இந்தப் பெயரின் சக்தி …
உலக வரைபடத்தில் ஓர் புள்ளயிலுள்ள தமிழீழத்தை …
அடையாளம் காட்டும் மகாசக்தியாக காட்டி நிற்கிறது …

செந்தமிழ்மறவனே! செவ்விழியோனே !
நீ பதித்த விடியலின் பாதையின் தடம்பதித்து
தமிழீழத் தாயக உறுதியை இறுக்கப் பற்றி
நின்வழி செல்வோம் .

வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!
வாழ்க நீடுழி!தமிழீழத் தலைமகனே!

தமிழரின் தாக்கம் தமிழீழத் தாயகம்.

அகரப்பாவலன்