பத்திரிகை புகைப்பட கலைஞர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை

288 0

பத்திரிகை புகைப்பட கலைஞர் அப்தாப் அகமது படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

வங்காளதேசத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றில் தலைமை புகைப்பட கலைஞராக நீண்ட காலம் பணியாற்றியவர், அப்தாப் அகமது (வயது 79).

இவர் டாக்கா ராம்புரா வாப்தா சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த 2013-ம் ஆண்டு, டிசம்பர் 25-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

பணத்துக்காக இந்த படுகொலை நடந்தது. இந்த கொலையில், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 2 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை, டாக்கா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

விசாரணை முடிவில், ஹூமாயுன் கபீர், பிலால் உசேன், ஹபிப் ஹவ்லதார், ராஜூ முன்ஷி, ரசல் ஆகிய 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி அப்துர் ரகுமான்சர்தார் நேற்று தீர்ப்பு அளித்தார். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஹூமாயுன் கபீர், படுகொலை செய்யப்பட்ட அப்தாப் அகமதுவின் கார் டிரைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்தாப் அகமது, 1971-ம் ஆண்டு நடந்த வங்காளதேச சுதந்திரப்போராட்ட காட்சிகளை படம் பிடித்தவர், ‘எகுஷே பதக்’ விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.