8 அதிகாரிகளின் மரண தண்டனை மேல்முறையீடு – நீதிமன்றம் முக்கிய முடிவு

62 0

கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், மேற்காசிய அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் இந்திய கடற்படையை சேர்ந்த 8 அதிகாரிகள், அந்நாட்டிற்கு எதிராக உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

அந்த 8 அதிகாரிகளும் பல முறை ஜாமின் மனு அளித்தும் அவை அந்நாட்டு நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.கைது செய்யப்பட்ட 8 அதிகாரிகளும், இந்திய கடற்படையில் 20 வருடத்திற்கும் மேல் உயர் பதவிகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் என்பதும், அவர்களில் சிலர் கடற்படையில் பயிற்சியாளர் பதவியும் வகித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த மாதம், கத்தார் நாட்டின் முதல் நிலை நீதிமன்றம், அந்த 8 அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமின்றி, இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவர்களை விடுவிக்க சட்டபூர்வ வழிமுறைகளில் தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இப்பின்னணியில், இந்திய அரசாங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் ஏற்று கொண்டுள்ளது. இது குறித்த அடுத்த கட்ட விசாரணைக்கு கத்தார் நீதிமன்றம் விரைவில் தேதி நிர்ணயிக்கும் என தெரிய வந்துள்ளது.

மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்ட செய்தி வெளியானதில் இருந்து 8 அதிகாரிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.