வட்டிவீதங்களைக் குறைத்தது மத்திய வங்கி

41 0

அண்மையகாலங்களில் அவதானிக்கப்பட்ட பணவீக்க சாதகநிலையின் காரணமாக வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கான வட்டிவீதங்கள் முறையே 9 மற்றும் 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.

நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான இறுதி நாணயக்கொள்கை மீளாய்வுக்கூட்டம் வியாழக்கிழமை (23) நடைபெற்றது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (24) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்குறிப்பிட்ட அறிவிப்பை விடுத்தார்.

அதன்படி, பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் சாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு கொள்கை வட்டிவீதங்களை 100 அடிப்படைப்புள்ளிகளால் குறைப்பதற்கு நாணயச்சபை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 9 மற்றும் 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதுடன், நியதி ஒதுக்குவீதத்தை முன்னர் நிர்ணயிக்கப்பட்ட 2 சதவீதமாகவே பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் பணவீக்க எதிர்பார்க்கைகள் உறுதிநிலைப்படுத்தப்பட்டிருப்பதுடன், மையப்பணவீக்கமானது நடுத்தரகாலத்தில் இலக்கிடப்பட்ட 5 சதவீத மட்டத்தை நோக்கி நகருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று தற்போது கொள்கை வட்டிவீதங்கள் தேவையான அளவுக்கு இலகுபடுத்தப்பட்டிருப்பதன் காரணமாக, எதிர்வருங்காலங்களில் கொள்கைத் தீர்மானங்களைத் தளர்த்துதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் பெறுமதிசேர் வரி அறவீட்டின் காரணமாக, குறுங்காலத்தில் பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க அழுத்தம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அடுத்ததாக எதிர்காலத்தில் தனியார் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் என்பன அதிகரிக்குமென எதிர்வுகூறப்படுவதுடன், தற்போதைய வட்டிவீதக் குறைப்பை அடிப்படையாகக்கொண்டு சந்தை வட்டிவீதங்களும் வெகுவிரைவில் குறைக்கப்பட்டு, அதன் நன்மையை பொதுமக்களுக்கும், நிறுவனக்கட்டமைப்புக்களும், சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிக முயற்சியாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனைத்தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியதாவது,

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வட்டிவீதக் குறைப்பின் மூலம் அரச திறைசேரியினால் விநியோகிக்கப்பட்ட பிணையங்களுக்கான வட்டிவீதமும், வங்கிகளின் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டிவீதமும் குறையவேண்டும். அதேபோன்று எரிபொருள் விலையேற்றம் போன்ற சில காரணங்களால் குறுங்காலத்தில் பணவீக்கம் சிறிதளவால் அதிகரித்தாலும், நீண்டகாலத்தில் அதனை இலக்கிடப்பட்ட குறைந்த மட்டத்தில் பேணமுடியும்.

அத்தோடு, உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன்வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையில் இருப்பதுடன், நாம் சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எனவே எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதியுதவி செயற்திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாம்கட்ட மதிப்பீட்டுக்கு சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம். அதனைத்தொடர்ந்து நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன்நிதியையும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதிக்கட்டமைப்புக்களின் நிதியுதவிகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

அடுத்ததாக அரசாங்கத்தினால் வரி அறவீடுகள் அதிகரிக்கப்பட்டாலும், அது சமூகப்பாதுகாப்பு செயற்திட்டம் உள்ளிட்ட தேவைப்பாடுகளுக்காக வேறு விதத்தில் செலவிடப்படுகின்றது. எனவே இந்த வரி அறவீடு நாணயக்கொள்கையைப் போன்று நேரடித்தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதுடன், இதன்மூலம் பொருளாதார மேம்பாட்டை பெருமளவுக்கு எதிர்பார்க்கமுடியாது.

மேலும், நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களென உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் இருவரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதியுயர் கட்டமைப்பு என்ற ரீதியில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதேபோன்று பொறுப்புக்கூறவேண்டியவர்களின் பட்டியலில் நாணயச்சபையும் இருப்பதனால், அதுகுறித்து முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனைகளை பெற்றுவருகின்றோம்.