நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய பிரதேச பாடசாலை ஒன்றில் அதிபர் உத்தரவினால் பொலித்தீன் மற்றும் பத்திரிகை தாள்களை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்ட இரு மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் மாணவர்களின் மதிய உணவு இடைவேளையின்போது இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில், ஏழு மாணவர்கள் தங்கள் உணவை பொலித்தீன் மற்றும் பத்திரிகைத் தாள்களில் சுற்றி கொண்டு சென்றுள்ளனர். பின்னர் இவர்கள் பொலித்தீன்களை தமது பாடசாலைப் பைகளுக்குள் போட முற்பட்ட போது, அதிபர் தலையிட்டு, அவற்றை உண்ணுமாறு உத்தரவிட்டதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் அதிபரின் உத்தரவையடுத்து உட்கொண்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ஏழு மாணவர்களில் இரு மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டன.
இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய நாவலப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

