குளியாப்பிட்டிய கிரியுல்ல பிரதேசத்தில் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திய பிரதான சந்தேக நபர் கிரியுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்கப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தரும் கிரியுல்ல சமன்கல பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது சோதனை நடவடிக்கைக்காக ஒரு முச்சக்கர வண்டியை நிறுத்த முற்பட்ட போது குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதனால் இரு பொலிஸ் உத்தியோகத்தரும் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று முச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளனர்.
இதன்பின்னர் சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார், முச்சக்கர வண்டியின் சாரதி மது போதையில் இருப்பதை அவதானித்த நிலையில், அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்போதே குறித்த நபர் பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

