மக்களுக்கு நலன் இல்லாத இந்த அரசாங்கம் தேவையில்லை: செந்தில் வேல் குற்றச்சாட்டு

70 0

மக்களுக்கு நலன் இல்லாத இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் மக்கள் வீதிகளில் இறங்கி இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராட வேண்டும் எனவும் புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் செந்தில் வேல் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று(15.11.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கொண்டுவரப்பட்ட பட்ஜெட்டில் மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டங்களும் இல்லை. யானை பசிக்கு சோளப்பொறி என்ற கதை போல் அவரது பட்ஜெட் அமைந்துள்ளது.

எந்த வித திட்டமிடலும் இல்லாமல் இந்த அரசாங்கம் புதிய பட்ஜெட்டில் மக்களை ஏமாற்ற நினைக்கின்றது. ஆண்டாண்டு காலமாக, ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் இருந்து மக்கள் நலன் சார்ந்த இந்த பட்ஜெட் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

மாறாக இவர்கள் தனியார் கம்பெனிகளை வளைத்து போடுவதற்கும் அவர்களை ஊக்குவிக்கவுமே இந்த திட்டங்களை கொண்டு வருகின்றார்கள். இந்த அரசாங்கம், சர்வதேச நானே நிதியத்தை திருப்தி படுத்துவதற்காக இந்த புதிய பட்ஜெட்டை தயாரித்துள்ளது ஒழிய இது மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட் ஆக இருக்கவில்லை.

நேற்றைய தினம் உச்ச நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பினை வழங்கி இருக்கின்றது. இந்த நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைந்ததற்கு பேசில், மஹிந்த ராஜபக்ஷ ,முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாரகாப்ரல் ஆகியோரே காரணம் எனத் தெளிவாக கூறியிருக்கின்றது. மாறாக அது மேல்வர்க்கத்தினரை , திருப்தி படுத்தவும் அவர்களுடைய கண்ணோட்டத்திலுமே இவர்களுடைய பொருளாதாரத் திட்டங்கள் அமைந்தது. எனவே தான் எங்களுடைய கட்சி கூறுகின்றது மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும். இந்த ரணில் ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.