கொழும்பு, கிராண்ட்பாஸ் வேஹெரகொட கனிஷ்ட வித்தியாலத்தில் நீர் குழாய்களை இணைத்து, நீர் திறப்பான்கள் பொருத்தி நிர்மாணிக்கப்பட்டிருந்த தூண் சரிந்து விழுந்ததில், சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் ஐந்து மாணவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். சிறுவர்களின் மீது விழுந்த இந்த ‘நீர் திறப்பான்’ கொங்கிறீட் தூண். செங்கல் கற்களையும் இடையில் செறுகி சுமார் 6 அடி உயரத்துக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த, 6 வயது சிறுமியான ஷெஹன்சா நிட்சராணி என்ற மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம், புதன்கிழமை (15) பகல்வேளையில் இடம்பெற்றுள்ளது.
சிறுமியான ஷெஹன்சா நிட்சராணி தனது ஆறாவது பிறந்தநாளை 15 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடினார். பாடசாலையில் தன்னுடைய வகுப்பு நண்பிகள், நண்பர்களுடன் கேக் வெட்டி உண்டதன் பின்னர் கைகளை கழுவுவதற்காக, நீர் திறப்பான் அருகில் சென்றிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட ஏனைய ஐவரும் முதலாம் தரத்தில் கல்விப்பயிலுபவர்கள். காயமடைந்த அறுவரில், சிறுமியான ஷெஹன்சா நிட்சராணியும் அடங்கியிருந்தார். அவர் லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றிருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏனையோர், கொழும்பு தேசிய வைத்திசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனத் தெரிவித்த கிராண்ட்பாஸ் பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவித்தனர்.

