நிலநடுக்கம் குறித்து தற்பாதுகாப்பு அவசியம்!

51 0

 நிலநடுக்கம் தொடர்பான இயற்கை சமிக்ஞைகளை கருத்தில் கொண்டு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பெருமளவான இழப்புக்களை தவிர்த்துக் கொள்ளலாம் என கிழக்கு பல்கலைக்கழக புவியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.கிருபைராஜா தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கையில் இடம்பெற்றுவருகின்ற நிலநடுக்கம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் சில வருடகாலமாக தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. இந்த இயற்கை சமிக்ஞைகளை கவனத்தில் கொண்டு நாம் சில முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபடிவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இதன்மூலம் பெருமளவான பாதிப்புகளில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். குறிப்பாக கரையோரத்தை அண்டியுள்ள பகுதிகளில் விசேட கவனம் செலுத்துவதோடு மாணவர்கள் மத்தியில் அனர்த்தக் கல்வி தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

2004ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் இருந்து இலங்கை மக்கள் 100 வீதம் மீளாத நிலையில் மீண்டுமொரு அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை சமுதாயத்தின் மத்தியில் உருவாக்க வேண்டும்.

விஞ்ஞான பூர்வமாக சான்றாதாரங்களின் அடிப்படையில் நோக்குமிடத்து, இந்தியத் தகட்டில் புதிய உப தகடொன்றின் தோற்றமும், இலங்கையிலும், அதனை  அண்டிய கடல் பிராந்தியங்களிலும் உள்ளகத் தகடுகள் மற்றும் குறைகளின் விருத்தி இன்று தோன்றியுள்ள நிலநடுக்க நிலைமைகளுக்கு பிரதான காரணங்களாகக் காணப்படுகின்றன.

குறிப்பாக இலங்கையின் கிழக்கே விருத்தியடைந்துள்ள குறைகள் உதைப்புக் குறை (Thrust fault) சார்ந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

உதைப்புக் குறைகள் எப்பொழுதும் நிலநடுக்க வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. இக்குறைகள் ஆபத்துமிக்க ஒன்றாகக் அடையாளம் காணப்படுகின்றது.

காரணம் உலகில் இடம்பெற்ற நிலநடுக்கங்களில் சக்திமிக்க நிலநடுக்கங்கள் இக்குறைகளிலேயே தோன்றியுள்ளன. எடுத்துக்காட்டாக துருக்கியில் பாரிய நிலநடுக்கங்கள் அங்கே அமைந்து காணப்படும் அனடோலியன் குறையில் இடம்பெற்று வருவதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

ஆகவே, நிலநடுக்கங்களையும் அதனோடு இணைந்ததான சுனாமி போன்றவற்றையும் உருவாகுவதற்கு வேண்டிய அடிப்படையான புவிச்சரிதவியல் நிலைமைகள் என்னவோ அவை இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்குப் ஆகிய பிராந்தியங்களிலும் விருத்தி பெற்றுள்ளன.

இத்தகைய பின்னணியிலேயே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, கொழும்பு பிரதேசங்களை அண்மித்து நிலநடுக்கங்கள் அடிக்கடி தோன்றுகின்றன.

இவை அனைத்தும் இலங்கைவாழ் மக்கள் அனைவரும் விழிப்புடன் செயற்படவேண்டும் என்பதற்கான இயற்கையின் சமிக்ஞையாகவே எண்ணத் தோன்றுகின்றது.

இவ்வாறு இயற்கையால் பல தடவைகள் அறிகுறிகள் எமக்கு விடுக்கப்பட்ட போதிலும்  இன்றுவரை முறையான தயார்படுத்தல் இன்றியே எமது சமுதாயம் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.

கடந்த 2007.07.18 ஆம் திகதி இலங்கையில் தென்மேல் கரையிலிருந்து 300 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் வங்காள விரிகுடாவில் 5.2 ரிச்டர் அளவுத்திட்டத்தில், கடல் அடித்தளத்திலிருந்து 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி அறிந்தவர்களை விட அறியாதவர்கள் ஏராளம். இதன் அதிர்வினை ஹம்பாந்தோட்டயில் இருந்து யாழ்ப்பாணம் வரையான கரையோரத்தில் மக்கள் உணர்ந்ததுடன், திஸ்ஸமகாராம என்னும் இடத்தில் பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தது. சுனாமிக்குப் பின்னர் எமக்கு இயற்கையால் விடுக்கப்பட்ட முதலாவது சமிஞ்ஞை. இதன் பின்னரும் கூட அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் நாம் என்ன மாற்றத்தைப் பெற்றுள்ளளோம். இன்று கூட எமது முன்னெடுப்புக்கள் இந்தோனேசியாவில் இருந்து ஒரு சுனாமி வந்தால் என்ன செய்யப்போகின்றோம் என்பது தொடர்பாகவே அமைகின்றதே தவிர. இன்று எமக்கு அண்மையில் ஆபத்தான ஒரு நிலைமை தோன்றியுள்ளதே அதற்கு என்ன செய்யப்போகின்றோம் என்பதைப்பற்றிச் சிந்திப்பதாக இல்லை.

இதனைத்தொடர்ந்து இலங்கையில் நிலத்திலும், சமுத்திரத்திலும் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த 29.12.2021 மட்டக்களப்பு கரையோரத்திலிருந்து 300 கிலோ மீற்றர் கடலுக்குள் 4.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை எமது பிரதேசத்துக்குப் பெரும் சவாலாகும். இந்நிகழ்வுக்குப் பின்னர் கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர்களை மையப்படுத்தியோ, கரையோர சமுதாயத்தை கருத்திற்கொண்டோ என்ன மாற்றத்தை அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் நாம் கண்டிருக்கின்றோம்?

இவ்வாறு இருக்ககையில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் 4.6 ரிச்டரில் கடந்த 11.09.2023 அன்று மட்டக்களப்புக்கு வட கிழக்காக 310 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடா கடலடித்தளத்தில் மீண்டுமொரு நிலநடுக்கம் பதிவானது. எம்மை நெருங்கியுள்ள இத்தகைய ஆபத்துமிக்க இச்சூழ்நிலையால் கரையோரச் சமுதாயம், கரையோரப் பாடசாலைகள், கரையோர அபிவிருத்தித் திட்டங்கள் ஆகிய அனைத்தினதும் நிலைபேண்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆபத்தை அறிந்திருந்தும் ஆற்றுப்படுத்த வேண்டியது கல்விப் புலத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்த ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும்.

இவை மட்டுமன்றி, 15.09.2018 ஆம் திகதி அன்று திருகோணமலை துறைமுகத்தை அண்டியும்,  19.02.2021 ஆம் திகதி அன்று பாணமை கடல் பிராந்தியத்திலும், 13.07.2022 கல்முனை கடற்கரையிலிருந்து 300 கிலோ மீற்றர்கள் கடலடித்தளத்திலும், 19.03.2023 அன்று திருகோணமலையின் கோமரங்கடவல பகுதியிலும் நில அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் 2023.11.12 ஆம் திகதி மொரவெவ பகுதியில் 3.5 ரிச்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து 2023.11.14 கொழும்புக்கு தென்கிழக்கே அமைந்த கடல் பிராந்தியத்தில் 6.1 ரிச்டரில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனுடைய தொடர்ச்சியாக நாளை எந்த இடத்திலும், என்ன அளவிலும் நிலநடுக்கம் ஏற்படலாம். இதனை முன்கூட்டியே அறியும் சக்தி எமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. இதனுடைய விளைவுகள் எவ்வாறு அமையப் போகின்றது என்பது அனர்த்த முகாமைத்துவப் பின்னணியில் நாம் இன்று வகுக்கப் போகும் உத்திகளிலேயே தங்கியுள்ளது.

இந்நிலையில், சமுதாய மட்டத்திலான முன்னாயத்தம் தொடர்பில் முயற்சிகளை முன்னெடுப்பது அவசியம். இம்முயற்சியில் முதல் கட்டமாக எமது நாட்டில் அதிகாரிகளுக்கே விளக்கமும் விழிப்புணர்வும் கட்டாய தேவையாக உள்ளது. காரணம் சரியான புரிதலும், நல்ல தெளிவும் அவர்களுக்குக் கீழ் செயற்படுபவர்களிடம் காணப்பட்டாலும் அவர்களை செயற்பட தூண்டுபவர்களாக இவ் அதிகாரிகள் விளங்குவதில்லை.

அதனால் தோற்றுப்போன முயற்சிகள் ஏராளம். குறிப்பாக மாணவர்களை நோக்கி விசேட கவனம் செலுத்தவேண்டியது இன்றியமையாததாகும். கரையோரத்தில் அமைந்த நூற்றுக்கணக்கான பாடசாலைளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்களை, அயிரக்கணக்கான ஆசிரியர்களையும் இத்தகைய ஆபத்துமிக்க சூழலிலிருந்து பாதுகாக்க வேண்டும். அவர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ளக் கூடிய அளவிலேனும் குறைந்தபட்ச தயார்படுத்தலையேனும் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் எனக் கருதுகின்றேன். அதனுடைய வெற்றி கூட கல்விதுறை சார்ந்த அதிகாரிகளுக்கு இந்நிலைமை தொடர்பான தெளிவினை ஊட்டுவதிலேயே தங்கியுள்ளது.

அனர்த்தக் கல்வி தொடர்பில் நாம் அடைந்துள்ள பின்னடைவு எம்மை மேலும் மேலும் நலிலு நிலைக்கே இட்டுச் சென்றுகொண்டிருக்கின்றது. அனர்த்தக் கல்வியின் அவசியத்தையும், அதன் தேவையையும் இலங்கையில் கல்விச் சமூகம் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாத நிலையே காணப்படுகின்றது.

ஆபத்து நிலைமைகளை அறிந்திருந்தும் அதனைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது என்பது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மாணவ சமுதாயத்தை தயார்நிலையில் வைத்துக்கொண்டு வாழ வழிகாட்டும் பொறுப்புவாய்ந்த ஆசிரியர்கள் அனைவரும் இந்நிலை தொடர்பில் சிறந்த தெளிவினைப் பெற்றுக்கொள்வது காலத்தின் தேவை.

ஏன் இலங்கையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன, இதற்கான புவியியல் பின்னணி என்ன, சுனாமி ஒன்று ஏற்படமுன் எத்தகைய அறிகுறிகள் காணப்படும், அதனை எவ்வாறு உணர்ந்துகொள்வது, நில அதிர்வினை உணர்ந்தால் அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும், எவ்வாறு மாணவர்களை வழிப்படுத்த வேண்டும், எமக்குள்ள ஆபத்தின் தன்மை எத்தகையது, ஆபத்துக்களைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பல விடயங்களில் ஆசிரியர்கள் தெளினைப்  பெற்றுக்கொள்வார்களேயானால் அவர்களால் மட்டுமே மாணவர்களை ஆபத்து நிலைகள் தோன்றும் பொழுது முறையாக நெறிப்படுத்த முடியும். இதன் மூலமாக நலிவுநிலையில் உள்ள மாணவ சமுதாயத்தை மட்டுமல்ல ஏன் அனைத்து சமுதாயங்களையும் தகட்டசைவுச் செயன்முறையுடன் கூடியதான இத்தகைய அனர்த்த ஆபத்திலிருந்து மீட்டெடுக்க முடியும்.

 கிழக்கு பல்கலைக்கழக புவியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.கிருபைராஜா