ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக தரம் உயர்த்த நடவடிக்கை

151 0

ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக  தரம் உயர்த்தினால் சிறந்த ரயில் சேவையை பெற்றுக் கொடுக்க முடியும். அதற்காக திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றி, தனி கேந்திர நிர்வாகத்திற்குப் பதிலாக நிர்வாக பகிர்வை ஏற்படுத்தும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது  என போக்குவரத்து மற்றும்  ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது  எதிர்க்கட்சி உறுப்பினர் நிரோஷன் பெரேரா எம்பி எழுப்பிய  கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றி, தனி கேந்திரமான நிர்வாகத்திற்குப் பதிலாக நிர்வாக பகிர்வை ஏற்படுத்தும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஈ டிக்கெட் முறைமை, ஜிபிஎஸ் முறைமை ஆகியவற்றை ஆரம்பித்து டிஜிட்டல் மயப்படுத்தினால் ரயில் சேவையை சிறந்த சேவையாக முன்னெடுக்க முடியும்

அத்துடன் ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றுவதற்காக விசேட நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்து அதன் அறிக்கையைப் பெற்றுக் கொள்வது அவசியம் என அமைச்சரவை அறிவித்துள்ள நிலையில், அமைச்சரவையின் செயலாளர் விசேட குழு ஒன்றை அதற்காக நியமித்துள்ளார்.

அந்த வகையில்  ரயில்வே முன்னாள் பொது முகாமையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் தீர்மானம் மிக விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அத்துடன் மின்சாரத்தில் இயங்கும் பஸ் சேவை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வருட இறுதியில் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்றார்.