ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எந்த வகையிலும் கிடைக்கப்பெறவில்லை – கலாரஞ்சினி

82 0

ஒவ்வொரு வருடமும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படுகின்ற நிதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எந்த வகையிலும் கிடைக்கப்பெறவில்லை என வட மாகாண காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்களில் தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார் .

கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) வட மாகாண காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்களில் தலைவி கலாரஞ்சினி ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செயதிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போதைய ரணில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதியினை வழங்கி எமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.

எமக்கு பணமோ, பொருளோ வேண்டாம். எமது உறவுகள் எமது பிள்ளைகளை எமக்கு பெற்றுத்தர வேண்டும். அதற்கான தீர்வையும் தரவேண்டும் என வலியுறுத்தியே தாம் கடந்த 14 வருடமாக போராட்டங்களை நடத்திவருகிறோம்.

O.M.P அலவலகம் திடீர் திடீர் என  புதிய புதிய  அலுவலகங்களை திறந்து வைக்கின்றார்கள். அவர்கள் எதும் எமக்கு தெரியாமல் எவருக்கும் இழப்பிடு வழங்குகிறார்களோ  தெரியாது.

இதுவரையில், எமக்கு  நிதி வழங்கப்படவில்லை. அத்துடன்  காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எவருக்கும் பணம் வழங்கப்பட வில்லை.

இது தொடர்பாக சர்வதேச அமைப்புகளிடம் கூட கதைத்து வருகிறோம். எந்தவித தீர்வும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.

ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கென நிதி ஒதுக்கப்படுகின்றது. இந்த நிதி எந்த வகையிலும் தமக்கு கிடைக்கப் பெறுவதில்லை என அவர் தெரிவித்தார்.