இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பான இடைக்கால குழு விவகாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட தீர்ப்பை விமர்சித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது நீதிமன்றக்கட்டமைப்பின் சுதந்திரத்துக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:
இலங்கை கிரிக்கெட் சபை குறித்த இடைக்கால குழு நியமனத்துடன் தொடர்புடைய வழக்கு பற்றி புதன்கிழமை (8) அமைச்சரவை அமைச்சர் ஒருவரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியின் நடவடிக்கை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் என்பன எம்மை மிகுந்த விசனத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன.
நீதிமன்றக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை என்பது சட்ட ஆட்சியின் அடிப்படைக் கோட்பாடாகத் திகழ்கின்றது. எனவே நீதிமன்ற சுயாதீனத்தன்மையில் ஏற்படுத்தப்படும் எந்தவொரு தலையீடும் மிகப்பாரதூரமானது என்பதுடன், அது நீதிமன்றத்தின்மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மலினப்படுத்தும்.
சுதந்திர சமுதாயத்தில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு நீதிமன்ற சுயாதீனத்தன்மை இன்றியமையாதது என்பதை நாம் எப்போதும் வலியுறுத்திவந்திருக்கின்றோம்.
அதேபோன்று நீதிபதிகளின் சுதந்திரமும், ஒவ்வொரு வழக்கிலும் உண்மையான தரவுகளை அடிப்படையாகக்கொண்டு பக்கச்சார்பற்ற தீர்மானங்களை மேற்கொள்வதற்கான இடைவெளியும், அரசாங்கம் உள்ளடங்கலாக எந்தவொரு வெளியகத்தரப்பினரதும் தலையீடு இன்றி சட்ட ஆட்சியின் பாதுகாவலர்களாக அவர்கள் செயற்படுவதற்கான வாய்ப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதும், நீதிபதிகளை மேற்கோள்காட்டி பேசுவதும் நீதிமன்றக்கட்டமைப்பின் சுதந்திரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்றே நாம் கருதுகின்றோம். இவ்விடயம் தொடர்பில் சட்டத்துறை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாகக் கரிசனைகளை வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர்.
அதேபோன்று நீதிமன்றக்கட்டமைப்பானது பொதுமக்களின் வலுவான நம்பிக்கையை அடித்தளமாகக்கொண்டே கட்டியெழுப்பப்பட்டிருப்பதுடன், சட்டத்துறை சார்ந்தோர் அந்த நம்பிக்கையை பாதுகாக்கவேண்டியது மிக அவசியமாகும்.
மேலும் சட்டத்தரணியொருவர் தமது கட்சிக்காரரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட தொழில்சார் உரிமையைக் கொண்டிருப்பதுடன், அவ்வுரிமைக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு அச்சுறுத்தலும் அத்தொழில்மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
அத்தோடு நீதிபதியின் செயற்பாடு தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மிகமோசமான குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதுமான நபர்கள் நியமிக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது.
அவர்களின் விசாரணைகள் மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையென நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றத்தின் நேர்மைத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படும். அதேபோன்று அக்குற்றச்சாட்டுக்கள் பொய்யென நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும்.
எனவே அனைத்துத்தரப்பினரும் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள வரையறைகளின் பிரகாரம் செயற்படவேண்டும் எனவும், எவ்வகையிலேனும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

