நேற்று, ஜேர்மன் பள்ளி ஒன்றில் இருவர் துப்பாக்கியுடன் மறைந்துள்ளதாக பொலிசாருக்குக் கிடைத்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
துப்பாக்கியுடன் இருவர் மறைந்துள்ளதாக கிடைத்த தகவல்
ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரிலுள்ள பள்ளி ஒன்றில், இரண்டு பேர் மறைந்துள்ளதாகவும், அவர்கள், துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக மிரட்டியதாகவும் தகவல் கிடைத்ததையடுத்து அங்கு விரைந்த பொலிசார், பள்ளியையும் அதை சுற்றியுள்ள தெருக்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால், பள்ளிக்குள் நடத்திய சோதனையில் யாரும் கிடைக்கவில்லை.

அடுத்த அழைப்பு
இந்நிலையில், சிறிது நேரத்திற்குள், பள்ளிக்கு சற்று தொலைவில் மற்றொரு அச்சுறுத்தல் குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்ற பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், இந்த சம்பவங்களின் பின்னணியில் இருந்தது நான்கு மாணவர்கள். முறையே, 12 வயதுடைய இருவர், 13 மற்றும் 14 வயதுடைய இருவர் என அந்த நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பொம்மைத்துப்பாக்கிகள் போல் தோன்றும் இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பள்ளியில் நிகழ்ந்த சம்பவத்தின் பின்னணியிலும் இதே மாணவர்களே இருந்தது தெரியவந்துள்ள நிலையில், எட்டாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மிரட்டப்பட்ட ஒரு ஆசிரியை ஆகியோரை இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்குட்படுத்த இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

