பம்பலப்பிட்டி யுனிட்டி பிளாஸா வணிக வளாகம் தகவல் தொழில்நுட்ப நிலையமாக மீள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறை முதலீட்டு திட்டத்தின் கீழ் இங்கு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புனரமைக்கப்பட்ட யூனிட்டி பிளாசா வணிக வளாகத்தின் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (07) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது.
Unity Plaza வணிக வளாகம் கொழும்பு நகரின் மையத்தில் அமைந்துள்ள முக்கிய வர்த்தக கட்டிடங்களில் ஒன்றாகும். தற்போது, இது அனைத்து தகவல் தொழில்நுட்ப தேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பூர்த்தி செய்யும் முதன்மையான வணிக வளாகமாக மாறியுள்ளது.
இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திருப்பு முனை என்று சொல்லக்கூடிய Unity Plaza, புத்தாக்கத்தை மேம்படுத்துவதற்கான அரச மற்றும் தனியார் ஒத்துழைப்புக்கு சிறந்த உதாரணம்.
1982 ஜூன் 25 இல், ஒனாலி ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் Unity Plaza நிறுவப்பட்டது. தற்போது, 51% பங்குகள் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானது. இதில் 45% பங்குகள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது. இந்த வணிக வளாகத்தின் திருத்த வேலைப் பணிகள் 2021 இல் தொடங்கப்பட்டது. அதற்காக சுமார் 400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இன்று, குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகியுள்ள இந்த வணிக வளாகம், 5 மாடிகளில் கடைகள் மற்றும் 5 மாடிகளில் அலுவலக வசதிகளைக் கொண்டுள்ளது. புதிய மீள் புனரமைப்பு நடவடிக்கைகளுடன், பல வாடிக்கையாளர் நட்பு வசதிகளும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், ஓனாலி ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் ஆர்ச்சி வர்மன், முகாமைத்துவப் பணிப்பாளர் ஹார்டி ஜமாடின், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்தியானந்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர மற்றும் அதிதிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .

