தலித் மக்கள் மீது தொடரும் வன்கொடுமையை தடுக்க கடும் நடவடிக்கை அவசியம்

153 0

தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கோவை, திருப்பூர் பகுதிகளில் ஜவுளித் துறையை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி, ஒட்டுமொத்த தொழில் துறையை நலிவடையச் செய்துள்ளனர். இதனால்கோவை, திருப்பூர், ஈரோடுமாவட்டங்களில் தொழிற்சாலைகள் ஸ்தம்பித்துள்ளன. இந்தப் பிரச்சினையில் தொழில் துறையினருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு வேண்டும்.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் அதிகமாக உள்ளது. தொழில் துறையினரை ஊக்கப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. சிறு, குறுந் தொழிற்சாலைகள் மட்டுமின்றி, வீட்டு உபயோகத்துக்கான மின்சாரக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது, பொதுமக்களைப் பாதித்துள்ளது.

திருநெல்வேலியில் தலித் சமூகத்தினர் மீது சிறுநீர் கழிக்கப்பட்டு, வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்திருக்காது.

ஆளுநரை மிரட்டி…: தலித் மக்களை வஞ்சிக்காமல், அவர்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை தடுக்க கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக ஆளுநரை மிரட்டி, எதுவும்சாதிக்க முடியாது. ஆளுநருக்கென தனி அதி காரம் உள்ளது. அதை அவர் பயன்படுத்தி வருகிறார். இவ்வாறு மத்திய இணையமைச்சர் எல்.முருகன்கூறினார்.