பாதாள குழு பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுப்பதையிட்டு ஒட்டுமொத்த பொலிஸாரும் வெட்கப்பட வேண்டும்

140 0

பாதாள குழுவினர் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுப்பதையிட்டு ஒட்டுமொத்த பொலிஸ் அதிகாரிகளும் வெட்கப்பட வேண்டும். பாதாள குழுவினருடன் ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் நெருக்கமாக செயற்படுகிறார்கள். இதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இனி மன்னிப்பு வழங்கப்படமாட்டாது. சிறந்த முறையில் சேவையாற்ற முடியாதவர்கள் தாராளமாக பதவி விலகலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

தென்மாகாணத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொலிஸ் நிலையங்களின் வளங்களை விரிவுப்படுத்துவதற்கு இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். பல சலுகைகளை பெற்றுக் கொடுத்துள்ளேன். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடையவில்லை. பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பிரதேசத்தில் ஏதேனும் சம்பவம் இடம்பெற்றால் அதற்கு உரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொறுப்புக் கூற வேண்டும்.

பொலிஸாரின் செயற்பாடுகள் இனி புலனாய்வு பிரிவுகள் ஊடாக கண்காணிக்கப்படும்.பாதாள குழுவினர் பொலிஸாருக்கு தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். இந்த நிலைக்கு பொலிஸ் சேவை தள்ளப்பட்டுள்ளதற்கு ஒட்டுமொத்த பொலிஸாரும் வெட்கப்பட வேண்டும்.

பாதாள குழு மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக நான் கடுமையாக செயற்படுவதால் பாதாள குழுவினர் என்னை அமைச்சு பதவியில் இருந்து நீக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பாதாள குழுவினருடன் ஒருசில பொலிஸ் அதிகாரிகள் நெருங்கிய தொடர்பில் உள்ளார்கள். செய்யும் தொழிலின் கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள அவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் இனி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறந்த முறையில் செயற்பட முடியாத பொலிஸார் தாராளமாக பதவி விலகலாம். நாட்டு மக்கள் பொலிஸ் சேவையை விமர்சிக்காமல் நம்பிக்கை கொள்ளும் நிலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும். பொலிஸாரின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஆகவே அனைவரும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றார்.