யாழ். போதனா வைத்தியசாலையில் 1050 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

167 0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் மலரவனின் தலைமையில் கடந்த 5 நாட்களில் வடக்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1050 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை (Cataract Surgery) மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிகிச்சைக்காக ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டவர்கள் அவர்களின் கிராமங்களில் இருந்து விசேட பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு, சிகிச்சையின் பின்னர், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

யாழ். போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களுடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலை, மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கடமையாற்றும் கண் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பல்வேறு நிலை உத்தியோகத்தர்களும் இணைந்து இந்த சிகிச்சை முகாமை சிறப்பாக செய்து முடித்தனர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் அவர், Assist RRR நிறுவனம் இதற்கான ஒழுங்கமைப்பில் பெரும் பங்காற்றியதோடு, சத்திர சிகிச்சைக்கு தேவையான கண் வில்லைகள் மற்றும் பொருட்களை அலாக்கா Foundation மற்றும் ஆனந்தா Foundation வழங்கியது. பல்வேறு தரப்பின் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் இந்த சிகிச்சை முகாம் வெற்றிகரமாக நிறைவேறியதாக தெரிவித்தார்.

இந்த சிகிச்சை முகாமை நிறைவு செய்ததற்கான இறுதி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அனோஜ் றொட்றிகோ கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.