மலையக மக்களுக்கான சேவையில் இருந்து இ.தொ.கா. பின்வாங்கப் போவதில்லை

176 0

மலையக மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவையில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் பின்வாங்கவில்லை. காங்கிரஸுக்கு மலையக மக்களின் ஆதரவு என்றும் உள்ளது என்பதை ‘நாம் 200’ நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது என காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பு சுகததாஸ அரங்கில் நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்ற ‘நாம் 200’ தேசிய நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது :

மலையகம் 200 என்பது வெறுமனே வருடமல்ல, அது எம் உறவுகளின் போராட்டம். எமது உறவுகள் ஒரு காலத்தில் அடையாளமில்லாத குடியுரிமை இல்லாதவர்களாக இருந்தபோது மறைந்த தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் எமக்கான அடிப்படை உரிமைகளையும் அந்தஸ்தையும் சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பயணத்துடன் தான் மலையகம் அபிவிருத்தியடைந்தது. இந்த நாட்டின் ஜனாதிபதியை தெரிவு செய்யும் அளவுக்கு மலையக மக்களின் இருப்பு மற்றும் தேவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மலையக மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவையிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் பின்வாங்கவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு மலையக மக்களின் ஆதரவு என்றும் உள்ளது என்பதை ‘நாம் 200’ நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.

மலையக மக்களின் கல்வி அபிவிருத்திக்காக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார். பதுளை மண்ணில் இருந்து இந்தியாவுக்கு சென்ற பொன். ஜெயசீலன் இந்திய சட்டமன்ற உறுப்பினராக அங்கீகாரம் பெற்றுள்ளார். இது இலங்கை மலையக தமிழர்களுக்கான சிறந்த அடையாளமாகும்.

மலையக மக்களை பெருமைப்படுத்தும் வகையில் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சகோதரர் அண்ணாமலை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட ‘நாம் 200’ நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட எமது மலையக உறவுகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.