பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் உயிரிழப்பு

190 0

இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட அமெரிக்காவின் முன்னாள் கடற்படை வீரர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை (30) உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரை சேர்ந்த முன்னாள் கடற்படை வீரரான 58 வயதுடைய லாரன்ஸ் ஃபாசெட் (Lawrence Faucette), அண்மையில் தனது இதயம் செயலிழந்த நிலையில், கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.

இந்நிலையில், மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி இவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சையின்போது மரபணு மாற்றப்பட்ட ஒரு பன்றியின் இதயம் இவருக்கு பொருத்தப்பட்டது.

பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் உடல் சுகவீனமுற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

“இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு ஒரு மாதமாக லாரன்ஸின் இதயம் ஆரோக்கியமாகவே இருந்ததோடு, அவரும் உடல்நிலை தேறி வந்தார். உறவினர்களோடு நன்றாகவே பேசி வந்தார்.

ஆனால், 6 வாரங்களுக்கு கழித்து அவரது உடல் இதயத்தை நிராகரிப்பதற்கான அறிகுறி தென்படத் தொடங்கியது. மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் லாரன்ஸை காப்பாற்ற முடியவில்லை” என மருத்துவமனை லாரன்ஸின் மரணம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டது.

மேலும், உலகிலேயே மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதல் நபர் டேவிட் பென்னட் ஆவார். அவருக்கும் இதே மருத்துவக் குழுவினரே கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் பன்றியின் இதயத்தை பொருத்தினர்.

ஆனால், டேவிட் பென்னட் இதயம் பொருத்தப்பட்டு 2 மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்தார்; லாரன்ஸ் 40 நாட்களிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.