இலவச சுகாதார சேவையை பாதுகாக்கவே போராடுகிறோம் – வைத்தியர் அன்பாஸ் பாறூக்

91 0

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சுகாதாரத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடியினால் ஆரம்ப,கிராமிய மற்றும் பிராந்திய பிரிவுகளில் உள்ள 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.

எமக்காக நாங்கள் போராடவில்லை.இலவச சுகாதார சேவையை பாதுகாப்பதற்காகவே போராடுகிறோம். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் அன்பாஸ் பாறூக் தெரிவித்தார்.

மாகாண மட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் முன்னெடுக்கும் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இலவச சுகாதார துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.வரி விதிப்பு,வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகிய காரணிகளால் இதுவரை 1500 இக்கும் அதிகமான வைத்தியர்கள்,விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.அத்துடன் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டுள்ளார்கள்.

பொருளாதார பாதிப்பினால் இலவச மருத்துவ துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒருவருட காலப்பகுதிக்குள் மாத்திரம் ஆரம்ப பிரிவு,கிராமிய பிரிவு,பிராந்திய பிரிவுகளில் உள்ள 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் எதிர்வரும் காலப்பகுதிகளில் 50 வைத்தியசாலைகளை மூடுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.அத்துடன் 65 வைத்தியசாலைகளில் விசேட வைத்திய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இலவச மருத்துவ துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பல யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்தோம்.ஆனால் இதுவரை சாதகமான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.அண்மையில் 08 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம்.அதற்கும் பதில் கிடைக்கவில்லை.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டை கண்டித்து மாகாண மட்டத்தில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறோம்.

எமக்கான நாங்கள் போராடவில்லை. இலவச சுகாதார துறையை பாதுகாப்பதற்காகவே போராடுகிறோம்.எமது போராட்டத்தினால் இலவச சுகாதார சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையாது.எமது போராட்டத்தின் நோக்கத்தை பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் அடையாள பணிப்புறக்கணிப்பு விபரங்கள்

2023.11.03 வடக்கு மாகாணம்,2023.11.06 (திங்கட்கிழமை) வடமேல் மாகாணம்,2023.11.07 (செவ்வாய்க்கிழமை) சப்ரகமுவ மாகாணம்,2023.11.08.(புதன்கிழமை) மத்திய மற்றும் கிழக்கு மாகாணம்,2023.11.09 (வியாழக்கிழமை) தெற்கு மற்றும் வடமத்திய மாகாணம்,2023.11.10 (வெள்ளிக்கிழமை) மேல்மாகாணம்.இந்த மாகாணங்களில் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபடுவார்கள்.

இந்த மாகாணங்களில் உள்ள மகப்பேறு வைத்தியசாலைகள்,சிறுவர் வைத்தியசாலைகள்,புற்றுநோய் வைத்தியசாலைகள்,இராணுவ வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகள் இந்த போராட்டத்தில் ஈடுபடுத்தபடமாட்டாது.அவசர சிகிச்சைகளில் வைத்தியர்கள் ஈடுபடுவார்கள்.