29 அபிவிருத்தித் திட்டங்களை வர்த்தமானியில் வெளியிடத் திட்டம்

85 0

இந்த வருடத்தில் 29 அபிவிருத்தி திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

பெரிய மாத்தறை அபிவிருத்தித் திட்டம், ஹிக்கடுவ அபிவிருத்தித் திட்டம், அம்பலாங்கொட நகர சபை அபிவிருத்தித் திட்டம், சீதாவக பிரதேச சபை அபிவிருத்தித் திட்டம், சீதாவகபுர அபிவிருத்தித் திட்டம், பாணந்துறை அபிவிருத்தித் திட்டம், ஹொரண அபிவிருத்தித் திட்டம், வத்தளை அபிவிருத்தித் திட்டம், ஜா-எல அபிவிருத்தித் திட்டம், கம்பஹா அபிவிருத்தித் திட்டம், கட்டான அபிவிருத்தித் திட்டம், மஹர அபிவிருத்தித் திட்டம், கெக்கிராவ அபிவிருத்தித் திட்டம், தலாவ அபிவிருத்தித் திட்டம், மாவனல்லை அபிவிருத்தித் திட்டம், குண்டசாலை அபிவிருத்தித் திட்டம், நாவலப்பிட்டி அபிவிருத்தித் திட்டம், கம்பளை அபிவிருத்தித் திட்டம், ஹட்டன் அபிவிருத்தித் திட்டம், வெலிமடை அபிவிருத்தித் திட்டம், பண்டாரவளை அபிவிருத்தித் திட்டம், வெல்லவாய அபிவிருத்தித் திட்டம், வவுனியா அபிவிருத்தித் திட்டம், மட்டக்களப்பு அபிவிருத்தித் திட்டம், அம்பாறை பிரதேச அபிவிருத்தித் திட்டம் ஆகியன வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளது.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய திருகோணமலை அபிவிருத்தித் திட்டம், எல்ல அபிவிருத்தித் திட்டம், ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஹிக்கடுவ அபிவிருத்தித் திட்டம் என்பன வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இவற்றில் எல்ல அபிவிருத்தித் திட்டம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் இவ்வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஐந்து அபிவிருத்தி திட்டங்களை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அவை குருவிட்ட பிரதேச சபை அபிவிருத்தித் திட்டம், ரம்புக்கனை பிரதேச சபை அபிவிருத்தித் திட்டம், பெல்மடுல்ல/கஹவத்தை அபிவிருத்தித் திட்டம், குளியாப்பிட்டி அபிவிருத்தித் திட்டம், கிளிநொச்சி (கரச்சி பிரதேச சபை) அபிவிருத்தித் திட்டம் என்பனவாகும்.

2024-2026 ஆகிய இரண்டு வருடங்களில் 66 அபிவிருத்தி திட்டங்களை வர்த்தமானியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அவற்றில் 6 மாநகர சபைகள், 14 நகர சபைகள் மற்றும் 46 பிரதேச சபைகள் உள்ளடங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சில அபிவிருத்தித் திட்டங்களில் சிக்கல் நிலைகள் காணப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், அந்தப் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க முடியும் என்றார்.

விடயத்துக்குப் பொறுப்பான  அமைச்சரால் நகர அபிவிருத்திப் பகுதியாக அறிவிக்கப்பட்ட எந்தப் பகுதிக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையானது அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்து அதனை நடைமுறைப்படுத்த கடமைப்பட்டுள்ளது. இது 1978/ 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உள்ளது.

இதன்படி தற்போது அறிவிக்கப்பட்ட 276 நகரப் பகுதிகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் பொறுப்பு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

1999 முதல் 2023 செப்டம்பர் 30 வரையான காலப் பகுதியில் 87 உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய பழைய காலாவதியான அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் 56 திருத்தப்பட்ட திட்டங்களை மீள்பிரசுரம் செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.