ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டை வீசியதாக கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி கருக்கா வினோத்துக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் கடந்த 25-ம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக பிரபல ரவுடியான சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் (42) கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் மீது கிண்டி போலீஸார் பிணையில் வரமுடியாதபடி 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்திருந்தனர். இதையடுத்து, அவர் நீதிமன்ற காவலில் மறுநாள் அதிகாலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணியை முழுமையாக கண்டறிய, கருக்கா வினோத்தை காவலில் எடுக்க போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி, 15 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
முன்னதாக கருக்கா வினோத்தை கிண்டி போலீஸார் புழல் சிறையில் இருந்து காவல் வாகனத்தில் சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது, ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும், தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பெட்ரோல் குண்டு வீசினேன்’ என கருக்கா வினோத் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கருக்கா வினோத் சிறையில் இருந்தபோது அவரை பிணையில் எடுத்தது யார்? அவரது குற்ற பின்னணி, அவரது தொடர்பு உள்பட அனைத்து விவரங்களையும் போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

