இலங்கை தற்போதைய உலகளாவிய சூழலில் உண்மையான அணிசேரக்கொள்கையை பின்பற்றவேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விசேடமாக எந்த சக்தியின் பக்கமும் சாராத அணிசேரா வெளிநாட்டுக்கொள்கையை இலங்கை பின்பற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லொஸ்ஏஞ்சல்சில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துவெளியிடுகையில் ஜேவிபியின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ள உலகில் எவரும் தனித்து வாழமுடியாது சர்வதேச பொருளாதாரங்களும் தொடர்பாடல்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை எனவும் ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வமாக அறிவி;க்கப்படாவிட்டாலும் பல வலுவான சக்திகள் அதிகாரப்போட்டியில் ஈடுபட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைக்கு இலங்கையிடம் சர்வதேச சக்தியாக மாறுவதற்கான திறமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலை காரணமாக இலங்கை உலக நாடுகளின் அதிகாரப்போட்டியில் சிக்குண்டுள்ளது அல்லது அதற்கு பலியாகியுள்ளது என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் மோதல்களில் ஈடுபட்டுள்ள இந்த நாடுகளிற்கு நேரடி அல்லது மறைமுக ஆதரவை வழங்குவதை தவிர்த்துக்கொள்வதே இலங்கையின் வெளிவிவகார கொள்கையின் நோக்கமாகயிருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாங்;கள் புவியியல் அடிப்படையில் இந்தியாவின் அதிகாரமையத்திற்குள் உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாக நாங்கள் எங்கள் பொருளாதார அரசியல் நோக்கங்கள் குறித்து ஆராயும் போது இந்தியாவை அலட்சியம் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாங்கள் எங்கள் பொருளாதார மூலோபாய தந்திரோபாயங்களை அதற்கு ஏற்ற விதத்தில்வடிவமைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

