‘வடமாகாண அபிவிருத்திக்கான புத்தாக்கம்’ எனும் தலைப்பில் வடமாகாண அபிவிருத்தி அதிகாரசபையை நிறுவுவதற்கான யோசனையொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் முன்வைக்கப்பட்டு அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அதற்கான திட்ட முன்மொழிவை வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாராஜா கையளித்துள்ளார்.
இதுதொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாண அபிவிருத்தி என்ற தலைப்பில் அதிகாரிகளிடம் உரையாற்றுகையில், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இணையாக வடமாகாணத்திலும் பாரிய அபிவிருத்தியொன்று இடம்பெற வேண்டுமென நம்புகின்றேன்.
யுத்தத்தினால் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் எதிர்பார்த்த அளவை இன்னும் எட்டவில்லை. எனவே, நாட்டை அந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கு 10வருடத் திட்டத்தின் கீழ் செயற்படுவோமென நம்புகிறோம். இந்த முடிவை அடைய, வெளிநாட்டு உதவிகள் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளின் உதவியையும் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அமைவாக நான் ‘வடமாகாண அபிவிருத்திக்கான புத்தாக்கம்’ எனும் தலைப்பில் வடமாகாண அபிவிருத்தி அதிகார சபையை உருவாக்குவதற்கான யோசனையை முன்வைத்தபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனை ஏற்றுக்கொண்டார். அதனையடுத்து அதற்கான திட்ட முன்மொழிவு தற்போது அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண அபிவிருத்தி அதிகாரசபையானது, சட்ட வலுவுள்ளதொரு அமைப்பாகும். தென்மாகாண அபிவிருத்தி அதிகாரசபையானது கடந்த 20வருடங்களாக செயற்படுகின்றது. இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அதனடிப்படையில் வடக்கில் அபிவிருத்தி அதிகாரசபை செயற்படுத்தப்படுவதன் ஊடாக வெளிநாட்டு முதலீடுகளுக்கு அப்பால், புலம்பெயர்ந்துள்ளவர்களின் முதலீடுகள் மற்றும் நன்கொடைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பாரிய சந்தர்ப்பமொன்று ஏற்படுவதற்கான நிலைமைகள் உள்ளன.
ஆகவே குறித்த முன்மொழிவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுகின்றபோது, அனைத்து தரப்பினரும் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றேன் என்றார்.

