தானிஷ் அலி பிணையில் விடுதலை

193 0

கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதான போராட்ட கள செயற்பாட்டாளர் தானிஷ் அலி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை ரயில்வே நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் கரும பீடத்தில் உத்தியோகத்தர் எவரும் கடமையில் இருக்கவில்லை எனக்கூறி அவர் தனது கையடக்கத்தொலைபேசியில் காணொளி பதிவு செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ரயில்வே உத்தியோகத்தர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஈடுப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன், ரயில் நிலையத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் அவரை கைது செய்து கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும் தனக்கு ரயில்வே உத்தியோகத்தர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து காயமடைந்த அவர் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில இன்று சனிக்கிழமை (28) கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தானிஷ் அலி காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதான செயற்பாட்டாளராக  காணப்பட்டதுடன் அவர் சிலருடன் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து நேரடி ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து, அச்சுறுத்தல் விடுத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்  நீதிமன்றத்தால்  பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அவர் துபாய் நாட்டுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட போது விமானமொன்றுக்குள் இருந்த போது குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த வருடம் ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.