நாட்டில் 30 ஆபத்தான மேம்பாலங்களும், 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளும் காணப்படுகின்றன. மேம்பாலங்களை நிர்மாணிப்பதாயின் 350 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது.
இருப்பினும் 200 கோடி ரூபாயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும் இவற்றை புனரமைக்க போதுமான நிதி இல்லை எனவும் நிதியை ஈட்டுவதற்கான பிரதான மூலம் வரியை அதிகரிப்பதாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு செல்லும் மேம்பாலம் சேதமடைந்துள்ளதால் அதனை புனர்நிர்மானம் செய்தவற்காக ஜனாதிபதி 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியிருந்ததுடன் அதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ரயில் நிலைய மேம்பாலத்திற்கான தற்காலிக படிக்கட்டுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எமது நாட்டில் இவ்வாறான 30 ஆபத்தான மேம்பாலங்கள் காணப்படுகின்றன. அவற்றை நிர்மாணிப்பதாயின் 350 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. ஆபத்தான பாலங்களை நிர்மாணிப்பதற்காக 200 கோடி ரூபாவுக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த வருடத்துக்காக வரவு செலவுத்திட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பாலங்களயேனும் நிர்மானிப்பதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவு, நிவாரணங்களை வழங்கும் போது முழு தொகையும் நிறைவடைந்து விடும்.
எஞ்சிய நிதி யாருடைய அரசாங்கமாக இருந்தாலும் வெளிநாட்டுக்கே செல்லும். கடந்த அரசாங்கங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக அதிக வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொண்டுள்ளது. தற்போது வெளிநாட்டு கடன்கள் கிடைப்பதில்லை. கடன் மறுசீரமைப்பு இடம் பெறும் வரையில் எதனையும் செய்ய முடியாது என்றார்.
இதன்போது ஊடகவியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
கேள்வி – இந்த பாலம் உடைந்து விழுந்தால் செய்வதற்கு ஒன்றுமில்லையல்லவா?
பதில் – இல்லை. நிதி இல்லையெனில் செய்வதற்கு ஒன்றுமில்லை. நிதியை ஈட்டுவதற்கான பிரதான மூலமே வரியை அதிகரிப்பதாகும். வரியை அதிகரித்தால் மக்கள் அதனை சுமப்பது கடினமாகும்.
கேள்வி – தற்காலிக பாலத்தை திறந்து வைப்பதற்கு எதற்கு விழா நடத்தப்படுகிறது?
பதில் – இல்லை. யார் திறந்து வைத்தது. உழைக்கும் மக்களுக்கு அவர்களது பணி தொடர்பாக கௌரவம் உள்ளது. 7 நாட்களுக்குள் நிறைவு செய்துள்ளனர். அதில் திறப்பதில் உள்ள தவறு என்ன?ஊடகம் என்னும் போது புத்திசாலித்தனமாக ஊடகத்தை பயன்படுத்த வேண்டும்.
இதனை விட ஆபத்தான பாலங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலம் ஆபத்தானது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இதனை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. நாட்டின் உண்மைகளை ஊடகங்களே வெளிப்படுத்த வேண்டும்.
ஆபத்தான பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் நாட்டில் 400 காணப்படுகின்றது. அவற்றுள் ஒன்றை திருத்துவதற்கு 40 முதல் 60 இலட்சம் ரூபா தேவைப்படும். பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் மூலம் பல உயிர்ச்சேதங்கள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டார்.

