அண்மையில் பெலவத்த பகுதியில் பாடசாலை அதிபர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி பெலவத்த பகுதியில் பாடசாலை அதிபர்களால் பல கோரிக்கைகளை முன்வைத்து நடாத்தப்பட்ட ஊர்வலத்தின் போது ஆர்ப்பாட்டகாரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.
கல்வியமைச்சர் மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக வெளிநாடு சென்றிருந்த வேளையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதிபர்கள் மற்றும் கல்வித் துறையின் ஏனைய பிரிவினரைப் பாதிக்கும் முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமைக்கு கல்வி அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

