நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராயும் நோக்கிலான ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றக்குழுவினரின் வருகையைக் கருத்திற்கொண்டு நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறுவதற்கான தற்காலிக தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டிருக்கக்கூடுமோ என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயரஸ்தானிகர் அலுவலகம் உள்ளடங்கலாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருப்பதுடன் அச்சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 30 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் டிரான் அலஸ், பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்று, அவசியமான திருத்தங்களுடன்கூடிய புதிய சட்டமூல வரைபினை மீண்டும் சமர்ப்பிக்கத் தயாரெனக் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அமைச்சர் டிரான் அலஸின் இந்தத் தீர்மானம் வரவேற்கத்தக்கது எனினும், அதன் நேர்மைத்தன்மை குறித்து தமக்கு சந்தேகங்கள் நிலவுவதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக எதிர்வரும் 30 ஆம் திகதி நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றக்குழு நாட்டுக்கு வருகைதரவுள்ள நிலையில், அதனை முன்னிறுத்தியே நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடுமோ என்று சிவில் சமூக செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் போன்ற அடக்குமுறைச் சட்டமூலங்களை மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றக்குழுவினர் பரிசீலனைக்கு உட்படுத்தி, அவை தொடர்பில் அதிருப்தியடையும் பட்சத்தில் அக்குழுவினர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக உடனடித் தீர்மானமொன்றைக் கொண்டுவரக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை தொடர்பான இத்தகைய உடனடித் தீர்மானமொன்று ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டமையை நினைவுகூர்ந்த ஷ்ரீன் ஸரூர், எனவே அவர்களது வருகையை முன்னிறுத்தியே நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறுவதற்கும், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இருப்பதற்குமான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கூடுமோ என்ற கேள்வி இயல்பாக எழுவதாகத் தெரிவித்தார்.
அதேவேளை, இதுபற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் வாபஸ் பெறப்படுமாயின் அது வரவேற்கத்தக்க தீர்மானமாகும் என்று குறிப்பிட்டார்.
இருப்பினும் இச்சட்டமூலத்தை முன்னரேயே சகல தரப்பினருடனும் கலந்தாலோசித்து தயாரித்திருக்கவேண்டும் எனவும், தற்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிப்பதற்காக நீதிமன்றம் அதிகளவான நேரத்தை செலவிட்டிருக்கும் நிலையில் இவ்வாறு கூறுவது அனைவரினதும் காலத்தை வீணடிக்கும் செயல் எனவும் சுட்டிக்காட்டினார்.

