கொட்டிகாவத்தை சனச வங்கியிலிருந்து சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டமை உட்பட 5 குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளியான “நாவல குஞ்சு“ என்பவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நாவல குஞ்சு என்பவருக்கு எதிராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பதிவுசெய்யப்பட்ட சுமார் 13 குற்ற வழக்குகளும் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொட்டிகாவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் நாவல குஞ்சு என்பவரின் மனைவியும் உள்ளடங்குவதோடு பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் ஏனைய சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணையின் போது திருடப்பட்ட 463 கிராம் பெறுமதியான தங்க நகைகள், 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கைக்கடிகாரம், பித்தளை விளக்கு, தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் ரைஸ் குக்கர் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

