உக்ரேனில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் 60 மில்லியம் யூரோ (£52m) மதிப்புள்ள சித்தியன் கால நகைகளை ஸ்பெயின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த 11 பழங்கால தங்கத் நகைகள் ஸ்பெயினில் மீள் விற்பனை செய்வதற்காக 2016 ஆம் ஆண்டு உக்ரைனில் இருந்து கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிமு 8 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரையிலான வளையல்கள், நெக்லஸ்கள் மற்றும் காதணிகள், உக்ரேனிய தேவாலயத்தைச் சேர்ந்தவை என போலி ஆவணங்களில் குறிப்படப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு செம்மறியாடுகளின் தலையுடன் கூடிய தங்கப் பட்டையை விற்பனை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கிமு 800 முதல் கிபி 400 வரை தற்போது தெற்கு உக்ரேன் உட்பட கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய நாடோடி மக்கள் சித்தியர்களாவர். இவர்களின் பாரம்பரிய மரபு மற்றும் கலாச்சார செழுமை ஆகியவை நேர்த்தியான உலோக வேலை செய்யும் திறன்களில் மற்றும் தங்க நகைகளை தயாரிப்பதில் காணப்பட்டது.
தனித்தனியாக, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் 14 தொல்பொருள் பொருட்களை மீட்டுள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்தனர். அவற்றை அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற ரஷ்யர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பொருட்களில் ஏறத்தாழ கிபி 5,000 முதல் 3,000 வரையான காலத்தைச் சேர்ந்த கற்கால கோடரியும் அடங்கும்.
“உக்ரேனுக்கு புதிய ஆயுதங்கள் கிடைத்துள்ளது என்று சொல்வது பாதுகாப்பானது. ஒரே பிடிப்பு என்னவென்றால் இந்த ஆயுதம் நம்பமுடியாத அளவிற்கு பழமையானது” என உக்ரேனின் கலாச்சார அமைச்சர் ரோஸ்டிஸ்லாவ் கரண்டியேவ் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் கேலியாக குறிப்பிட்டார்.
சித்தியன் கால கலைப்பொருட்கள் உக்ரேனின் வரலாற்று பாரம்பரியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரேன் மீது மேற்கொண்ட தாக்குதலின் போது உக்ரேனிய அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த சித்தியன் கால தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

