அமைச்சரவை திருத்தம் குறித்து கவலையடைந்துள்ளோம்.சுதந்திர கட்சியின் உறுப்பினருக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு வழங்கப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.
ஜனாதிபதியின் தூரநோக்கமற்ற செயற்பாடுகளினால் கட்சி என்ற ரீதியில் விரக்தியடைந்துள்ளோம்.ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பொய்யான பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அவர் சுகாதார அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாங்கள் தோற்கடித்தோம்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளார். அவரை சுகாதார அமைச்சு பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ரமேஷ் பதிரன சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.ஆனால் தற்போதைய நிலையில் ஜனாதிபதி அமைச்சரவையில் திருத்தம் செய்யாமல் இருந்திருக்கலாம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களே பாராளுமன்றத்தில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். ஆனால் அரசாங்கத்திலும், அமைச்சரவையிலும் பொதுஜன பெரமுனவுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களில் ஐந்து பேர் மாத்திரம் அரசாங்கத்துடன் இணைந்துள்ளார்கள்.
தற்போதைய அமைச்சரவை திருத்தத்திலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினருக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு என்பதை ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டி, அதிருப்தி தெரிவித்துள்ளோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆரம்பத்தில் இருந்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.
ஜனாதிபதியின் தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் கட்சி என்ற ரீதியில் நாங்கள் விரக்தியடைந்துள்ளோம். உயரத்துக்கு செல்வதற்கு ஏணியை பயன்படுத்தி விட்டு, பின்னர் ஏணியை காலால் தட்டி விடும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடு உள்ளது என்று நாட்டு மக்கள் எண்ணும் நிலை தோற்றம் பெற்றுள்ளது. ஆகவே ஜனாதிபதியின் செயற்பாடு குறித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

