சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்புடையோர் ஆசிரியர்களே

144 0

சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. இதனை உணர்ந்து செயற்பட்டால் சிறந்த வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என யாழ். போதனா வைத்தியசாலை நரம்பியல் சத்திர சிகிச்சை  நிபுணரும் மருத்துவருமான பொன்னம்பலம் ஆதித்தன் தெரிவித்தார்.

வடமராட்சி 91 க.பொ.த. உயர்தர மாணவர்களினால் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிக்கு சொலிடர் இயந்திரம் (கழிவுகளை தூண்டாக்கும் இயந்திரம்) வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாங்கள் அனைவரும் சுகாதார முறைகளையும்  சட்டங்களையும் பின்பற்றி நடப்போமானால் வருகின்ற நோய்களையும் விபத்துக்களையும் தவிர்க்கக்கூடியதாக இருக்கும்.

மனம், உடல் சுகாதாரமாக பேணப்படும் பட்சத்தில் வைத்தியசாலையின் தேவைகள் குறைக்கப்படும். குறிப்பாக, தற்போது  விபத்துகள் அதிகரித்து காணப்படுகிறது. இவை குறைக்கப்படுமானால், வைத்தியசாலையின் தேவைகள் அல்லது கட்டில்களின் எண்ணிக்கைகளை குறைக்க முடியும்.

சாதாரணமாக கூறப்படுகின்ற வீதி ஒழுங்குகளை, வாகனம் செலுத்தும்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை பின்பற்றி நடந்தாலே முடியுமான வரை விபத்துகளை தடுக்க முடியும்.

ஒரு விபத்தினால் தனிநபருக்கு, அவருடைய குடும்பத்துக்கு, சமூகத்துக்கு ஏற்படுகின்ற கால விரயம், நஷ்டம் போன்றவற்றை எவரும் கவனத்தில் எடுப்பதில்லை. பொருளாதார ரீதியில் ஏற்படுகின்ற நஷ்டத்தை விட விபத்தினால் ஏற்படும் நஷ்டம் அதிகம். விபத்து ஏற்படாமல் தடுப்பதே மிக சிறந்த வழி. இது ஆசிரியரின் கையில்தான் உள்ளது.

ஆசிரியர்களின் மாணவர்களுக்கான கற்பித்தல் மாணவர்களது வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். அவர்களுக்குள் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்துவது போல் இருக்க வேண்டும். இதற்காகத்தான் ஆசிரியத் தொழில் புனிதமானது என கூறுகிறேன்.

ஆசிரியர்கள் தனது அனைத்து மாணவர்களும் சித்தியடைய வேண்டும் என்று நினைப்பவர்கள்.  இந்த ஒருவர் சித்தியடையக்கூடாது என எந்த ஆசிரியரும் நினைக்கமாட்டார்கள்.

மாணவர்களின் முதல் கதாநாயகர்களாக ஆசிரியர்களே இருக்கிறார்கள். ஆகவே, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்கின்றபோது ஆழ்ந்து சிந்தித்து நல்வழிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் யாழ். தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.பரமானந்தம், உப பீடாதிபதி ஜெய காண்டீபன், தேசிய கல்வியற் கல்லூரி கல்வியியலாளர்கள் ஆகியோருடன் யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கணினி போதனா ஆசிரியர் அ.உதயகுமார், தொழிலதிபர் வீரசிங்கம் திருக்குமார், உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆசிரியர் இரத்தின சபாபதி சுரேஸ்குமார் மற்றும் பல ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.