பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பதாக இபிஎஸ் நாடகம்: முதல்வர் ஸ்டாலின் சாடல்

129 0

பாஜகவை விமர்சிக்காமலேயே பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி போடும் நாடகம், மிகப்பெரிய நரித்தனத்தின் அடையாளம். இவ்வாறெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆட்டுவிக்கப்படுகிறார். தேர்தல் நெருங்க நெருங்க அதுவும் அம்பலம் ஆகிவிடும், என்று வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த மார்ச் 22-ஆம் நாள் அண்ணா அறிவாலயத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் இருந்தே நாம் தேர்தல் பணிகளை நாம் தொடங்கிவிட்டோம். தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்திருக்கிறோம். இதோடு நான்கு வாக்குச் சாவடி முகவர்கள் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். இன்னும் சென்னை மண்டலம் மட்டும்தான் பாக்கி இருக்கிறது.

சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியிருக்கிறார். பத்திரிகைகளில் படித்துப் பார்த்தேன். அது பேச்சு அல்ல, வயிற்றெரிச்சல். தன்னுடைய வயிற்றெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டி இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று பேசியிருக்கிறார். இந்த இரண்டரை ஆண்டுகால சாதனைகளைச் சொல்ல ஆரம்பித்தால் அதற்கே இரண்டு மணி நேரமாகும். அவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறோம். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ‘பச்சைப் பொய்யர்’ பழனிசாமி, சொன்னதிலேயே பெரிய பொய் எது என்றால் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களைத்தான் ரிப்பன் வெட்டி நாம் தொடங்கி வைக்கிறோமாம். பிளான் போட்டு, கட்டி முடித்து வைத்துவிட்டார்களாம். நாம் சென்று ரிப்பன் வெட்டிவிட்டு வந்துவிட்டோமாம். யாரு? பொய்ச்சாமி, மன்னிக்கவும் பழனிசாமி பேசுகிறார்.

 

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே? அது நீங்கள் போட்ட திட்டமா? எதிர்கட்சித் தலைவர் பழனிசாமியை அன்போடு பணிவோடு கேட்கிறேன், விடியல் பயணம் – பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் நீங்கள் போட்ட திட்டமா? காலைச் சிற்றுண்டித் திட்டம், யார் போட்ட திட்டம்? புதுமை பெண் திட்டத்தில், மாணவியர்க்கு 1000 ரூபாய் தருகிறோமே, இது பழனிசாமியின் திட்டமா?லட்சக்கணக்கான மாணவர்களை முன்னேற்றும் ’நான் முதல்வன் திட்டம்’ அதிமுக திட்டமா? நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி – இதெல்லாம் என்ன என்றாவது பச்சைப் பொய்யர் பழனிசாமிக்கு தெரியுமா?